*ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளர் பிள்ளையான்
கிழக்கு மாகாணத் தமிழ்ச் சமூகம் விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில் இராணுவத் தலைமைத்துவத்தினாலும் கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்தது. இது மேலும் தொடர வேண்டுமா என்பதை கிழக்கு தமிழ்ச்சமூகம் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும் , கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கல்குடா தொகுதியில் உள்ள பேத்தாளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்;
தமிழ் அரசியல் தலைமைகளும் கடந்த காலங்களில் தீர்க்கதரிசனமற்ற முறையில் செயற்பட்டு வந்ததால் எமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை.
போரின் கொடுமைகளால் உணர்ச்சிவசப்பட்டவனாகவே விடுதலைப் போராட்டத்தில் இணைந்தேன். கிழக்கு பகுதியில் இளைஞர் யுவதிகள் தமது உயிர்களை தியாகம் செய்தனர்.
இன்று அடிப்படைத் தேவைகளைக் கூட பெற முடியாத நிலையில் அகதி முகாம்களில் அவலநிலையில் எமது மக்கள் வாழ்கின்றனர். எவ்வளவு காலம்தான் இந்த நிலைமையில் மக்கள் வாழ்வது இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
இதற்கான ஒரு நல்ல களமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்துள்ளது. நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் குறைவான வாக்குகள் போடப்பட்டதைப் போன்ற தவறை தமிழ் மக்கள் இந்த மாகாண சபைத்தேர்தலிலும் செய்துவிடக்கூடாது.
தமிழ் மக்கள் நேரகாலத்துடன் வாக்களிக்கச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதுடன் தமது தொகுதியின் மூன்று வேட்பாளர்களுக்குமான விருப்பு வாக்குகளையும் இட வேண்டும்.
அப்போதுதான் ஒன்பது உறுப்பினர்களை நாம் வெற்றி பெறச் செய்ய முடியும். அதன்மூலம் அதிகளவு பிரதிநிதிகளை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் முதலமைச்சர் பதவியும் எமக்கே கிடைக்கும்.
யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சகலதையும் இழந்து அரசியலிலும் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்துடன் இணைந்தோம்.
தமிழர்களின் நலன்களுக்காகவே தனி அரசியல் கட்சியை உருவாக்கி ஜனநாயக ரீதியில் செயற்பட்டு தேர்தல்களில் போட்டியிடுகின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இரு பிரிவுகளான போது உட்பூசலைத் தீர்க்க எமது பெரியவர்கள் முன்வரவில்லை. எம்மைத்துரோகிகள் என்று முத்திரை குத்தி எமக்கு எதிராக யுத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் இருந்து மீட்சி பெறுவதற்காகவே தனியான அரசியல் கட்சியை நாம் உருவாக்கினோம். அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு. இதன்மூலமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என்றார்.