*அமைச்சர் அதாவுல்லா நம்பிக்கை
கிழக்கு மாகாண மக்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டக் காத்திருப்பதாக அமைச்சர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
தேசிய காங்கிரஸின் திருமலை மாவட்ட மாநாடு அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்றபோது மேலும் உரையாற்றியுள்ள அமைச்சர் தெரிவித்துள்ளதாவது;
தலைவர் அஷ்ரப் கொள்கைக்கு முரணாக இன்று ரவூப் ஹக்கீம் செயற்பட்டு வருகின்றார். அஷ்ரப் மரணிப்பதற்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரையில் அக்கட்சியை ஆதரிக்கமாட்டேன் என்றார். ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியினதும் நோர்வேயினதும் எண்ணங்களுக்கு இசைந்து கொண்டிருக்கின்றார்.
நமது மறைந்த தலைவர் அஷ்ரப் ஒருபோதும் மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்றோ, மத்திய மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்றோ யோசித்ததில்லை. இருப்பினும், இன்றைய தலைமை கிழக்கு மாகாணத்தின் தலைவராக வரவேண்டும் என கனவு காண்பது அவரின் வங்குரோத்து அரசியலைத் தெளிவாக காட்டுகின்றது. எனவே, கிழக்கு மக்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கியதேசியக் கட்சிக்கும் அதன் மேல் வலம் வரும் ரவூப் ஹக்கீமுக்கும் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இம்மாநாட்டின் போது பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு;
கிழக்கு மாகாணம் தனித்தும் சுதந்திரத்தோடும் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்த இம்மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தல்.
தனித்துவமான சுதந்திர கிழக்கு மாகாணத்திற்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா சக்திகளினதும் செயற்பாடுகளை முறியடித்தல்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே இன உறவினை வளர்த்தலும் அவர்களை பாதுகாத்தலும்.
கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கோடு இணைக்க திரைமறைவில் எடுத்துவரும் சதி முயற்சிகளை தோற்கடிக்க பாடுபடுதல்.
அரசியல், சமூக, கலாசார ரீதியில் பலமிழந்திருக்கும் திருமலை மாவட்ட மக்களுக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக அரசியல் தலைமை கொடுத்து அவர்களை மீளௌச்செய்தல்.
கிழக்கில் வறுமையை ஒழித்து திட்டமிட்ட அபிவிருத்திகளை செய்வதற்கு பாடுபடுதல்.
1987 ஆம் ஆண்டு கிழக்கு மக்களை கேட்காமல் வடக்கோடு கிழக்கை இணைத்தும் தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையோடு மீண்டும் ஒப்பந்தமொன்றை செய்ததன் மூலம் கிழக்கு மக்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்தும் அங்கு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைத்து கிழக்கு மாகாணத்தை சின்னாபின்னப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியை இம்மாகாண சபைத் தேர்தலில் தோற்கடிக்க பாடுபடுதல்.
கிழக்கின் தனித்துவம், சுதந்திரம் பேணப்படுவதற்கும் அங்கு வாழும் சமூகங்களிடையே நல்லுறவை வளர்த்து அம்மக்கள் நிம்மதிப் பெருவாழ்வு வாழ்வதற்கும் கிழக்கு மாகாணம் பெரு அபிவிருத்தி காண்பதற்குமாய் இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கும் திருமலை மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரையும் வெல்ல வைப்பதற்கும் பாடுபடுதல்.
நாட்டில் எல்லா சமூகங்களையும் சமாதானத்தோடு, நிம்மதியாக வாழ்வதற்கு வழிசமைக்க பாடுபடுதல்.
பயங்கரவாதத்திற்கெதிராக போராடிவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரத்தை பலப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் தேசிய காங்கிரஸின் பல்லாயிரக்கணக்கான போராளிகளினால் தக்பீர் முழங்க அங்கீகரிக்கப்பட்டன.