முஸ்லிம் மக்களின் நலனையும் தனித்துவத்தையும் வலியுறுத்தி, "முஸ்லிம் விடுதலை முன்னணி" எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று கிழக்கு மாகாண சபை தேர்தலில் களமிறங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்காக உள்ளூரிலும் வெளிநாட்டிலும், மேற்கொண்ட நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள இக்கட்சி தாம் வெற்றிபெறுவதன் மூலம், முஸ்லிம் மக்களின் விமோசனத்துக்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வாக்குறுதியளித்து துண்டுப்பிரசுரமொன்றையும் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களின் தனித்துவத்தை கவனத்தில் கொண்டு இத்தேர்தலில் தனித்துவமான கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ள இக்கட்சி, இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தாம் ஆற்றவுள்ள பணிகள் குறித்து அதன் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
நாங்கள் சர்வதேச ரீதியாக செயல்படுபவர்கள். எங்கள் சமூகத்துக்குள் ஏற்படும் பல பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் கையாண்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
"ஹலால் சட்டத்தை சட்டரீதியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னெடுத்தபோது மக்கள் விடுதலை முன்னணி அதனை எதிர்த்தது. இதனைக் கண்டித்து பல போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் எதிர்த்தோம். உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்படும் மத ரீதியான சமூகப் பிரச்சினைகளுக்கு கண்டன ஊர்வலம் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். பலஸ்தீனப் பிரச்சினை, ஈராக் பிரச்சினைகளும் இதிலடங்கும். எனவே தான், இவ்விடுதலை முன்னணியை இலங்கை கிழக்கு மாகாணத்திற்கும் அறிமுகம் செய்து எங்களுக்கான முழு ஆதரவையும் பெற நினைத்துள்ளோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எங்களது கட்சிக்கு குறிப்பிட்ட பகுதியையோ தொகுதியையோ கொண்டிராமல் மாவட்ட ரீதியான பரவலான வாக்குகளை எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் எங்களுக்கு சிறுபான்மைக் கட்சி என்ற முறையில் ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு உங்களது வாக்குகள் உதவும் என நம்புகிறோம்.
இன்றைய கால கட்டத்தில் எங்களுக்கு பல அவசர தேவைகள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிப் பாவனையால் சுபஹுக்கான பாங்கு சொல்வது பள்ளிவாயலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் பெறுவதற்கான தேவைப்பாடு மற்றும் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தடை செய்வதன் அவசியம் இதன்மூலம் குர்பான் போன்ற புனித கடமைகளை செய்வதன் சுதந்திரத்தை பேணுதல், பாரம்பரியமாக வாழ்ந்த எங்களது பூமியை அபகரிக்கும் சக்திகளை விரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமது பரம்பரையின் முன்னோடிகளுக்கு தமிழர்களால் வழங்கப்பட்ட மண்முனை, நொச்சிமுனை போன்ற எல்லைகளைக் கொண்டிருக்கும் எமது காணிகளை அடையாளம் கண்டு அதற்கான குடியேற்றங்களையும் அத்துமீறிக் குடியேறும் முறையற்ற குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்தல், தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பலப்படுத்தவும், பிளவுகள் ஏற்படுவதற்கான காரணிகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகள் எட்டுவதற்கான ஏற்பாடுகள், கைத்தொழில்களை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளும் எமது பிரதான நோக்கங்களாக உள்ளன என அக்கட்சி தெரிவித்துள்ளது.