*எல்லாவல மேதானந்த தேரர்
கிழக்கு மாகாணத்தின் அனைத்து விகாரைகளிலும் விளக்குகளை ஏற்றி தேர்தலில் அரசு வெற்றி பெற்று மூவின மக்களும் சமாதானமாக வாழ பிரார்த்திக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியிடம் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பண்டு பண்டாரநாயக்கா அதாவுத செனவிரத்ன உட்படபெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எல்லா வல மேதனந்த தேரர் கூறியதாவது; "கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என சிலர் காட்ட முயற்சித்தாலும். உண்மையில் இங்கு காணப்படும் புராதன சின்னங்கள் மூலம் தொன்று தொட்டு இப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்ததாக கூறமுடியும். இயற்கை வளம் நிறைந்த கிழக்கை புலிகள் தமிழீழத்தை நனவாக்கும் பொருட்டு அழித்து நாசமாக்கியுள்ளனர். மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து இராணுவத்தினர் கிழக்கை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதனை கட்டிக்காப்பது கிழக்கு மாகாண மக்களின் பொறுப்பாகும்.
மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலின் போது கிழக்கில் ஜனநாயகத்தை உருவாக்க முடியாது எனக் கூறியவர்கள் இன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்த கிழக்கை மீண்டும் விடுதலை புலிகளிடம் கொடுப்பதற்கே ரவூப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கவும் சூழ்ச்சி செய்து வருகின்றனர். எனவே அரசுக்கு எதிராக இடப்படும் ஒவ்வொரு வாக்கும் அது விடுதலைப் புலிகளுக்கு சார்பாக அளிக்கப்படும் வாக்குகளாகும்" எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது;
அரசாங்கம் சிறந்ததொரு அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்த தடையாக உள்ள அனைத்தையும் சீர்ப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதில் ஜனாதிபதி அரச சார்பற்ற நிறுவனங்களுக்கோ, சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கோ பயப்படாமல் பல தீர்மானங்களை எடுத்துள்ளார்.
இம் மாகாணசபை தேர்தல் கிழக்கு மக்களுக்கு முக்கிய மானதாகும். ஏனெனில், ரணில் விக்கிரம சிங்க, ரவூப் ஹக்கீம் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றுமானால் மீண்டும் கிழக்கு புலிகளின் அட்டகாச பூமியாக மாறும். எனவே கிழக்கு மக்கள் அனைவரும் அரசின் வெற்றிக்காக இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்".