*அமைச்சர் சேகு பெருமிதம்
இருபது வருடங்களாக இறுக்கி மூடப்பட்டிருந்த கிழக்குக் கோட்டையின் ஜனநாயக வாசலை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் விரியத் திறக்க வைத்துள்ளது என்று ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எச். சேகுஇஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் உரையாடிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டு, இராணுவ ரீதியாக வெல்லப்பட்டு நிர்வாக ரீதியில் சுமுகமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகக் காற்றை சகலரும் சுவாசிக்கச் செய்யும் ஏற்பாடாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் கருதப்படுகிறது.
இதன் மூலம் பிரதேச மட்டத்தில் மட்டுமல்லாது மாகாண மட்டத்திலும் மக்கள் அதிகாரத்தின் பங்காளிகளாக ஆவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. நாட்டுச் சட்டத்தின் நற்பேறுகளை தமிழ்மொழி மாகாணங்களும் அனுபவிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் நோக்கத்துக்கு முன்னோடியாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் யாரும் போட்டியிடலாம் யாரும் வெல்லலாம் என்ற திறந்த நிலையே காணப்படுகிறது.
அதற்கு சற்று முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் நீதி, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்று கூறிய எதிர்க்கட்சிகள் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன் மூலம் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சுதந்திரமானதும் நேர்மையானதுமாக நடைபெறும் என்பதை அரசாங்கத்தை குறைகூறித்நிரிந்த இந்தக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிப்பதை உற்சாகப்படுத்தியுள்ள அரசாங்கம் தனக்குச் சார்பான கட்சிகளுக்கே வெற்றிகிட்ட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தவில்லை.