காவத்தை ஓபாவத்தை திம்புல்வல பிரதேச தமிழ் மக்களின் தேசிய அடையாள அட்டை பெறுவதில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்கள் அதாவது வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே தோட்ட நிர்வாகம் அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும். தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு பிரதேச கிராம சேவகர்கள் மூலமே அடையாளயா அட்டை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் அடையாள அட்டை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ், புகைப்படங்கள், முத்திரை ஆகியவை இருந்தால் போதுமானதாக இருந்தது.
ஆனால், தற்போது அடையாள அட்டை பெறுவதற்கு பெற்றோர்களின் அடையாள அட்டையின் பிரதி, பிரஜா உரிமை சான்றிதழின் பிரதி ஆகியவையும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
திம்புல்வல பிரதேசத்தில் மேற்கூறப்பட்ட ஆவணங்களின்றி அனுப்பிய விண்ணப்பப் படிவங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இப்பிரதேச கிராம சேவகர் அடையாள அட்டை பெற்றுச் சென்றவரிடம் கூறியுள்ளனர்.
பெரும்பாலானோர் தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள். இவர்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது அடையாள அட்டை மிகவும் முக்கியம்.
ஆனால், பிரஜாவுரிமை எல்லோரிடமுமில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் தோட்டப் பகுதி இளைஞர்கள், யுவதிகளுக்கு அடையாள அட்டை மிகவும் அவசியமாகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்படுகின்றது.