*ஈ.பி.டி.பி. வேண்டுகோள்
"ஆராதனைக்குரிய தேவாலயங்களை ஆயுதங்கள் ஆட்சி செய்ய முடியாது . அந்த வகையில் ஆயுதங்களோடு நடமாடிய புலிகளின் பிடியிலிருந்து மடு தேவாலயத்தை மீட்டெடுத்ததுடன் நின்றுவிடாது அங்கு அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஈ.பி.டி.பி.வேண்டுகோள் விடுத்துள்ளது. மடுத் தேவாலயத்தை படையினர் கைப்பற்றியது தொடர்பாக மேற்கண்டவாறு தெரிவித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தொடரும் படைநகர்வின் மூலம் மடுமாதா தேவாலயத்தை புலிகளிடம் இருந்து விடுவித்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். புனிதத் தலமான மடுத் தேவாலயம் யுத்த சேதங்கள் எதுவுமின்றி மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தகைய மக்களின் மன மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
படை நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருக்கேதீஸ்வரர் ஆலயம் படையினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அங்கு நடந்து முடிந்த உற்சவங்களில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சுதந்திரமான வழிபாட்டில் ஈடுபடுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் படையினர் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடயமாகும். இதுபோலவே படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் தோறும் சுதந்திரமான வழிபாட்டிற்கு உகந்த சூழலை படையினர் உருவாக்கியுள்ளனர்.
ஆகவே, படையினரால் மீட்கப்பட்ட மடுத் தேவாலயத்தின் சூழலையும் மக்களின் சுதந்திரமான வழிபாட்டிற்குரியதான புனிதப் பிரதேசமாக ஆக்குவதற்கும் வழிபடச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான கட்டாயக் கடமைகள் குறித்து கரிசனையோடு கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இதேவேளை, மடுமாதா சொரூபத்தை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அங்கிருந்து புலிகள் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றிருப்பது மக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும்.
மடுத் தேவாலயத்தில் மாதா சிலையினை மறுபடியும் புலிகள் தாமதமின்றி ஒப்படைப்பதே உரிய முறையாகும். கத்தோலிக்க ஆயர்கள் , வணபிதாக்கள் மட்டுமன்றி சர்வ மதத் தலைவர்களும் மனிதநேய அமைப்புகளும் மதஸ்தாபனங்களும் இது குறித்த அழுத்தங்களை எடுத்துச்செல்ல வேண்டியது பாரிய கடமையாகும்.
சகல மக்களும் விரும்பும் ஆன்மீக வெளிச்சங்களை திரைபோட்டு மறைக்கும் தடைகளை அகற்றி எமது மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.