*பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
சித்திரவதையிலிருந்து மக்களைப் காப்பாற்றுவதற்கு டாக்டர்களும் சட்டத்தரணிகளும் இணைந்து செயற்பட வேண்டும். இவ்விழிப்புணர்வுச் செயலமர்வு இரு துறைகளைச் சேர்ந்தவர்களிடையேயும் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனடிப்படையில் ஆவணப்படுத்தல் என்பது மிக முக்கியமான அம்சமாகும். இவ்வாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.
சித்திரவதை பற்றிய ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் என்ற தலைப்பிலான விழிப்புணர்வுச் செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் அனுசரணையுடன் இலங்கை ஹரித்தாஸ் செடக் அமைப்பினால் நடத்தப்பட்ட இச்செயலமர்வு திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 5 சட்டத்தரணிகள், 9 டாக்டர்கள் உட்பட மொத்தம் 18 பேர் இதில் பங்குபற்றினர்.
திருகோணமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பின் பணிப்பாளர் வண.பிதா.எப்.ஆர்.டயஸ் வரவேற்புரை நிகழ்த்தும்போது பாதுகாப்பும் சுதந்திரமும் தற்போது பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் எமது பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றன. இக்காலகட்டத்தில் இவ்விழிப்புணர்வுச் செயலமர்வு பொருத்தமானதாக அமைகின்றது. இது ஆக்கபூர்வமான பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பொலன்னறுவை பொதுவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் குமார சேனநாயக்கா, சித்திரவதை பற்றிய உடல் வைத்திய அம்சங்கள் பற்றி உரையாற்றினார். திருகோணமலை பொதுவைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.கடம்பநாதன் சித்திரவதை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான தாக்கங்கள் பற்றி உரையாற்றினார். சித்திரவதை தொடர்பான சட்டரீதியான அம்சங்கள் பற்றி கண்டி சட்டத்தரணியும் செடக் அமைப்பின் சட்ட அதிகாரியுமான டிரினி கோர்டன் ரேயன் கருத்துரை வழங்கினார்.