பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் விலைவாசி அதிகரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ள யாழ் மக்களை மீட்டெடுத்து ஜனநாயக சூழலை உருவாக்க இன்றைய மே தினத்தில் உறுதி பூணுவோம் என்று மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மாநகரசபை உறுப்பினருமான ஏணி எஸ்.இராஜேந்திரன் விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள மே தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்களின் சந்தாவைப் பெற்றுக்கொண்டு வாக்குகளையும் சுவீகரித்துக்கொண்டு பாட்டாளி மக்களை பகடைக்காய்களாகப் பாவித்து பதவிச் சுகம் பெறுவதிலேயே செயற்பட்டு வருகிறது.
வரலாற்றுப் பெருமை மிக்க ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் மேலக மக்கள் முன்னணியாக உயிர்த்தெழுந்து கொழும்பு மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்ற அங்கத்துவமாகப் பதிவு செய்து இருக்கின்றது.
மலையகமெங்கும் மதிக்கப்படும் தலைவராக மேலக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவரும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத் தலைவருமான மனோகணேசன் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உணர்வாக, உரிமைக்குரலாக, உரிய வேளையில் செயற்படும் தலைவர் மனோகணேசனின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் சக்தியை, மலையகத் தமிழ் மக்கள் இந்த மேதினத்தில் திரண்டு வந்து பொகவந்தலாவ நகரில் புதிய எழுச்சியை, மலையக சமூகத்தின் மாற்றத்துக்கான புதிய வரவை வெளிப்படுத்த வேண்டும். உழைக்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வை ஒடுக்குவதற்கு துணைபோகும் போராட்ட சங்கங்களிலிருந்து வேறுபட்டு மாறுபட்ட போராட்ட உணர்வுடனே ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தனது பணியை முன்னெடுத்துச் செல்கின்றது.
மலையகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகியிருக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சூழலில் சற்றும் சளைக்காது துணிவுடன் எதிரணி வரிசையில் இருக்கும் ஒரேயொரு இந்திய வம்சாவளி மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் என்பதை நாடே அறியும்.
அஞ்சாது அசாத்திய துணிவுடன் தமிழ் மக்களுக்காக தனித்துவம் காக்கும் ஓர் தமிழ் மகனாக தலைவர் மனோகணேசன் இருப்பதை தமிழ் மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் நன்குணர்ந்து கொழும்பில் போன்று மலையகத்திலும் புதிய அரசியல் கலாசாரத்தை நிலை நிறுத்த இந்த மே தினத்தில் உறுதி பூணுவோம்.