*பிரதியமைச்சர் செல்லச்சாமி
உலகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட போராட்டங் களை நினைவு கூர்ந்து நமது அமைப்புகளை பலமுள்ளதாக மாற்றும் நோக்குடனேயே உலகளாவிய ரீதியில் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. சகல ஒடுக்கு முறை களுக்கும் எதிரான போராட்ட உறுதி எடுக்கும் புரட்சிகர நாளாக உலகம் பூராவும் இத்தினம் கொண்டாடப்படுவதும் சிறப்பம்சமே.
வியர்வை சிந்தி உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றித் திருநாள் இன்றாகும். மேதினி போற்றும் இன்றைய மே தினத்தில் எமது தொழிலாளர்களின் ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் நாமெல்லாம் ஓரணி சேர்ந்து தொடர்ந்தும் நமது உரிமைகளை வெற்றிகொள்ள மன உறுதி பூணுவோம். இதுவே நமது மே தின சங்கற்பமாக அமைய வேண்டும் என்று மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போஷகரும் பிரதி தபால் அமைச்சருமான எம்.எஸ்.செல்லச்சாமி விடுத்துள்ள மே தினச் செய்தியில் கூறியுள்ளார்.
செல்லச்சாமி தனது மே தினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
"இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத்திகழும் நம்முடைய இந்திய வம்சாவளி பாட்டாளி தோட்டத் தொழிலாளர்கள் எல்லாத் துறைகளிலும் தொடர்ந்தும் முன்னேற்றம் காண இன்றைய உலகத் தொழிலாளர் வெற்றித் திருநாளில் உறுதி பூண வேண்டும்.
மே தினம் உலகத் தொழிலாளர்களின் மகத்துவத்தை மீண்டும், மீண்டும் ஆண்டுதோறும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க சிக்காக்கோ நகரில் போராட்டம் நடத்தி 8 மணித்தியால வேலை நேரத்தை வெற்றி கண்ட உலகத் தொழிலாளர்களின் வெற்றிமிக்க வரலாற்று தினமே மே தினமாகும்.
சிக்காக்கோ நகரில் அன்றைய ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான முறையில் துப்பாக்கிகளால் சுட்டுத் தீர்த்தனர். தொழிலாளர்கள் வீதிகளில் இறந்து கிடந்தனர். சகல தொழிலாளர்களின் வஸ்திரங்களும் சிவப்பு நிறமாக மாறின ஏன்? சிக்காக்கோ நகர் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மூழ்கியது. மே தினம் செந்நிறமாக மாறியது.
இலங்கையின் பொருளாதார உயர்ச்சிக்கு நமது தொழிலாள மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமது வியர்வையைச் சிந்தி கடுமை யாக உழைக்கின்றனர். இலங்கையின் பொருளா தாரத்துக்கு அவர்களின் வியர்வை உரமாக மாறியது பேருண்மையே. நாட்டுக்கு நாளாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணியினைத் தேடிக்கொடுக்கும் நம் மக்கள் தேயிலைத் தோட்டங்களில் காலமெல்லாம் வியர்வை சிந்தி பாடுபடுகின்றனர்.
அவர்கள் வாழ்வில் உயர்ச்சி விரைவாக வேண்டும். இதுவே, நமது பிரார்த்தனை, நமது மக்கள் தமது வாழ்வை முன்னேற்ற தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை உயர்ச்சி காணச் செய்ய எமது இன்றைய தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழி காட்டலில் நாமும் பெரிதும் பாடுபட்டே வருகிறோம். எமது சக்தியை மென்மேலும் நாம் அதிகரிக்க வேண்டும்.
உலகம் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை உண்மையாக மதிக்க வேண்டும் அப்போது தான் மே தினம் யதார்த்தமாக மாறும்".