*பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன்
தேசிய நலனில் அக்கறைகொண்டு தங்களது உழைப்பை உரமாக்கி அர்ப்பணித்து வரும் தொழிலாளர்கள் வாழ்வியல் துயரங்கள் அகன்று அமைதியும், சமாதானமும் நிறைந்து மறுமலர்ச்சி உதயமாகும் நாளே உண்மையான தொழிலாளர் தினமாகும். யுத்தம் வடகிழக்கில் ஏற்படுத்திவரும் அழிவுகளும், அனர்த்தங்கள் நாடெங்கும் ஏற்படுத்திவரும் இனவாத பேதங்களும், மலையகத்தில் ஏற்படுத்திய அச்சங்களும், ஓய்ந்து மனித வாழ்க்கையின் அர்த்தங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதே இன்றைய பிரதான தேவையாகும் இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-
நாளாந்த உழைப்பை நம்பிவாழும் மலையக தொழிலாளர்களுக்கு இன்று பொருளா தாரத் தாக்கம் ஏற்படுத்திய சிரமங்களை எண்ணிப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு அழுத்தத்தையும், ஆதரவையும், கொடுத்து வருகின்றோம். கம்பனிகள் தொழிலாளர்களை அடிமை சாசனம் எழுதப்பட்ட ஆபிரிக்க அடிமைகளைப் போல நடத்துவதை இனியும் அனுமதிக்கப்போவதில்லை. தொழிலாளர் களின் ?உழைப்பை உறிஞ்சி வாழும் சில முதலாளித்துவ இனவாதிகளுக்குப் பாடம் புகட்டு வதற்கு அனைத்து மலையகத் தொழிலாளர் அமைப்புகளும் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைவது அவசியமாகும்.
கருத்து மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் சமுதாய சீர மைப்புக்கும் செழுமைக்கும் இன்றைய ஒற்றுமையே பிரதானமாகும். அரச ஊழியர்களின் சலுகை கள் உரிமைகளின் மூலமே கிடைத்துள்ளன. அதேபோல் மலையக தொழிலாளர்களின் இன்றைய சலுகைகளும், உரிமைப்போராட்டத்தின் மூலமே பெறப்பட்ட வரலாறுகளுக்கு எதிர்காலத்தில் புதுவடிவம் கொடுப்பது அத்தியாவசியமான அவசரமான தேவையாகும். தொழிற் சங்கங்களை புதிது புதிதாக அமைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் காட்டிக் கொடுக்கப்பட்டு விலை பேசப்படுகின்ற நிலையை மாற்றும் சக்தி தொழிலாளர்களிடமே பொதிந்து கிடக்கின்றது. இவைகளை ்ஓரணியில் திரட்டி பேரணியாக்கி எதிர்கால சந்ததியின் விடுதலைக்கும் சுதந்திரம் நிறைந்த அமைதியான வாழ்வுக்கும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய அரசியல் வாதிகளாகிய நமது பிரதான கடமையாகும்.
காணாமல் போனவர்களுக்கும் கைது செய்யப்பட்டு காரணமின்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுக்கும் அடிப்படை வாழ்வியல் உரிமைகளைப் பறித்துவரும் தமிழர்களின் மீதான கைதுகளும் யுத்தத்தால் ஏற்பட்டுள்ள அவலம் என்பதை சகலரும் உணர்ந்து செயற்படுதல் வேண்டும். அமைதியை உருவாக்குவதற்கு யுத்தம் ஆயுதமாக அமையாது. பேச்சுவார்த்தையும் புரிந்துணர்வுத் தன்மையும் விட்டுக்கொடுப்புமே அமைதியை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தொழிலாளர் தினத்தில் உழைப்போர் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.