*இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிய மே தினத்தில் உறுதிபூணுவோம் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிர்வாக இயக்குநரும் தோட்ட சேவையாளர் சங்க பொதுச்செயலாளருமான ஆர்.கே.சுரேஷ் விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள மே தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மே தினம் உலகிலுள்ள சகல தொழிலாளர் வர்க்கத்தினராலும் கொண்டாடப்படும் ஒரு தினமாகும். ஆனால் நமது நாட்டிலுள்ள அரசியல் சார்ந்த மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் `மே தினத்தினை' மலையக மக்களிடையே தமக்குள்ள செல்வாக்கினை அரசுக்கு வெளிப்படுத்தி, அதன் மூலம் அமைச்சுப் பதவிகளையும் இணைப்பாளர் பதவிகளையும் பெறுவதற்கான ஒரு தினமாகக் கருதி பெருமளவிலான பணத்தினை வீண்விரயம் செய்கின்றனர்.
தங்களது சந்தாப்பணத்தை மாதந்தோறும் தமது சம்பளத்தில், தமது தலைமைகளுக்கு ்பிச்சைீ இடும் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட உத்தியோகத்தர்களும் நட்டாற்றில் விடப்படுகின்றனர்.
தனியார் மயமாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் இன்று அவற்றை நிர்வகிக்கும் தனியார் நிர்வாகங்கள் பெருமளவிலான ஆதாயத்தினை எதிர்பார்த்து தொழிலாளர் வர்க்கத்துடன் கடும்போக்கினைக் கடைப்பிடிப்பதுடன் வழமையாக தொழிலாளர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் அனுபவித்து வந்த சலுகைகளையும் உரிமைகளையும் பறித்தெடுத்து தாமே தோட்டத் தொழிலாளர்களினதும் தோட்ட உத்தியோகத்தினர்களினதும் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சில சுயநலப்போக்குள்ள தொழிற்சங்கத் தலைமைகளுடன் இணைந்து `கூட்டு ஒப்பந்தம்' என்ற அடிமை சாசனத்தினை ஏற்படுத்தி தொழிலாளர் வர்க்கத்திற்கு அடிமைவிலங்கினை பூட்டியுள்ளனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட சில வருடங்களுக்கு உத்தியோகத்தர்களாலும் தொழிலாளர்களாலும் சம்பள உயர்வுக்காக போராடமுடியாதுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ற வருமானம் பெருந்தோட்டத்துறை ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.
பதவி வெறிபிடித்த தலைமைகள் ்தொழிலாளர் தினமான இன்றைய மே தினத்தில், இது சம்பந்தமாக புரட்சிகரமாக மேடையில் முழங்க முற்படலாம். ஆனால், சம்பள உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சம்பந்தமாக முழக்கமிட்டு வீணாக தமது அமைச்சுப் பதவிகளை இழக்கவிரும்பமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.