இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இப்பகுதியில் மீண்டும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ள இடங்களை கட்டிடவியல் ஆராய்ச்சி நிலையம் இனங்கண்டுள்ளது.
இவ்வாறான இடங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்யுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பிரதேசங்கள் பலவற்றில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான வசிப்பிடமின்மையால் இவ்விடங்களிலிருந்து இடம்பெயர மறுத்து வருகின்றனர்.
அபாயம் தோன்றியுள்ள பெரும்பாலான இடங்கள் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களாக இனங்காணப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் தோட்ட நிர்வாகம் அதிகாரிகளின் இழுபறி நிலை காரணமாகவும் தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயத்தில் மனிதாபிமானமற்று செயற்படுவதனாலும் இவ்விடயத்தில் தொழிலாளர்களுக்கு நியாயம் பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி எலபாத்த, நிவித்திகல, பெல்மதுளை, கலவான, கிரியெல்ல, அயகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, தெரணியகலை, யட்டியாந்தோட்டை, கேகாலை, அரனாயக்க, ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு நிலவும் அபாயம் தோன்றியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.