மதுபோதையில் தனது மனைவியை பொல்லால் தாக்கியும் வயது வந்த இரு மகள்மாரை பேனாக்கூரினால் குத்தி காயப்படுத்தியும் சித்திரவதை செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நொச்சியாகம சுற்றுலா நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் மேற்படி நபர் சம்பவ தினத்தன்றும் மதுபோதையில் வீட்டுக்கு வரவே கணவனுக்கும் மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையிலிருந்த கணவன், மனைவியைப் பொல்லால் தாக்கியதால் ஒருகையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் வலி பொறுக்க முடியாது அழுதார்.
அதனைப் பொறுக்க முடியாத மகள்மார் இருவரும் தமது தந்தையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக் காட்டியுள்ளனர். பின்பு இவர் குமிழ்முனைப் பேனா ஒன்றின் கூரை அடுப்பில் சூடாக்கி 12,14 வயதுடைய மகள்மார் இரண்டு பேரினதும் கைகளை சுட்டுக் காயப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி கிராமவாசிகள் நொச்சியாகம பொலிஸாருக்கு இரகசியமாகத் தகவல் வழங்கியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நொச்சியாகம , ஹல்மில்லகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஏ.தயாரத்ன என்பவரே மேற்படி நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார். காயத்துக்குள்ளான இவரது மனைவியும் மகள்மார் இருவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நொச்சியாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.குமாரசிங்க தெரிவித்தார்.