* மேதினச் செய்தியில் பிரதமர் விக்ரமநாயக்கா
தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் பெற்றுக் கொண்ட உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கின்றமை முற்போக்கு அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். அவ்வாறே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
இவ்வாறு பிரதமர் இரட்ணசிறி விக்ரமநாயக்க விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
உயிர் தியாகத்தின் மூலம் பல உரிமைகளைப் பெற்ற வீரமிக்க இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தினர் பெற்றுக் கொண்ட வெற்றியினை நினைவுகூரும் இந்த மே தினத்திலே அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகின்றேன்.
இலங்கையில் காணப்படும் பயங்கரவாதப் போராட்டம் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விளக்கம் தொழிலாளர் வர்க்கத்தினரிடம் காணப்படுதல் வேண்டும். ஏனெனில் இவ்வாறானதொரு நிலையிலே அரசாங்கம் முகம்கொடுத்துள்ள இந்தச் சவாலின்கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான கடமையாக அமைவது தமது பொறுப்புகளையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியமையாகும். அனைத்தையும்விட நாட்டின் ஐக்கியத்தை பாதுகாத்தல் வேண்டும். அதனால் நாட்டின் இறைமைக்கும், சமாதானத்திற்கும் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தொழிலாளர் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பானது தொடர்ந்தும் தேவைப்படுகின்றது.
இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் பற்றி நாம் புரிந்துகொண்டுள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு பின்னிற்கப்போவதில்லை. சாதி, இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒரே தாயின் பிள்ளைகளாக முன்னோக்கிச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்போம். அதற்காக எமது தொழிலாளர் வர்க்கத்திற்கு பலமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென இந்த மே தினத்திலே பிரார்த்திக்கின்றேன்.