*அ.இ.தோ.தொ.சங்கத் தலைவர் இ.சந்திரசேகரன்
உழைக்கும் வர்க்கம் பிளவுபட்டுப் போவதற்கு பதிலாக ஓரணியில் திரளவேண்டிய தேவையும் கொள்ளைக்காரப் பொருளாதாரம், உழைப்பை சுரண்டுதல் ஆகிய செயற்பாடுகளிலிருந்து மீட்சிபெறவேண்டிய தேவையும் உழைக்கும் மக்களுக்கு தற்போது உள்ளது. இலங்கை உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்டக்கூடிய, பலம் வாய்ந்த அமைப்பு ரீதியான தொழிலாளர் வர்க்க சக்தியின் தேவை ஏற்பட்டுள்ள வேளையில் இம்முறை மேதினம் உழைக்கும் வர்க்கத்துக்கு மிக முக்கியமானதாகும். என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.சந்திரசேகரன் விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;
இலங்கையிலுள்ள உழைக்கும் மக்களின் பலத்தை வலுவிழக்கச் செய்வதற்காக அவர்களைக் கூறுபோட ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியையும் கொள்ளைக்கார பொருளாதார முறையினால் எமது நாட்டு வளங்கள் கொள்ளையடித்து உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை சூறையாடும் முயற்சிகளுக்கு எமது சங்கம் கடுமையான அழுத்தத்தினை கொடுத்து வருகிறது.
இலங்கை உழைக்கும் மக்களின் நம்பிக்கையைக் கொண்டுள்ள அமைப்புரீதியானதும் சரியான தலைமைத்துவமும் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் "செம் மேதினக் கூட்டம்" ஏகாதிபத்தியத்துக்கும் பிரிவினை வாதத்துக்கும் கொள்ளைக்கார பொருளாதாரச் சூறையாடலுக்கும் எதிராக இடம்பெறுகிறது.
இன்றைய தினத்தில் உழைக்கும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்காக நடைபெறும் மக்கள் விடுதலை முன்னணியின் செம்மே தினக் கூட்டத்துக்கு இலங்கை உழைக்கும் வர்க்கத்தோடு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் கைகோர்த்துக் கொள்கிறது.