ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நளினியை விரைவில் விடுதலை செய்யக்கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறையில், ராஜீவின் மகள் பிரியங்கா காந்தி, நளினியை சந்தித்த ஆறுவாரங்களின் பின்னரே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த பதினேழு வருடங்களாக சிறையிலிருக்கும் நளினிதான் இதுவரை 17 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதாகவும் ஆனால் 14 ஆண்டுகள்தான் ஆயுள்தண்டனை என்றும் நன்னடத்தை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நளினியின் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜோதிமணி, விசாரணையை ஜூன் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் மேலதிக பொலிஸ் ஆணையாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நளினியின் சட்டத்தரணி துரைசாமி, வேலூர் சிறையின் தண்டனைக்காலம் தொடர்பான அலுவலர் நளினியின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டுமென சிபாரிசு செய்துள்ளதுடன் 17 ஆண்டுகள் நளினி சிறையில் கழித்துள்ளாரென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் நளினி அனுபவித்த தண்டனைக் காலத்தைக் கருத்தில் கொள்ளாது விடுதலை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.