யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கொல்லப்பட்டவர், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக `புதினம்' இணையத்தளம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்தியில்,
கொக்குவில் ஆடியபாதம் வீதியும் பிறவுண் வீதியும் சந்திக்கும் வீதியில் கேணியடி பகுதியில் இவர் சென்றுகொண்டிருந்த போது செவ்வாய் இரவு 7.15 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொக்குவில் ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குணரட்ணம் சுகந்ததீபன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவராக முன்னர் இருந்த இவர், தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர் போன்று தொடக்கத்தில் செயற்பட்டு, பின்னர் அதற்கெதிராக செயற்பட்டு வந்தார். தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான இளைஞர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு முழுமையான பங்கிருந்தது.
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் படையினருடன் இணைந்து செயற்படத் தொடங்கிய இவர், படை முகாமிலேயே தங்கியிருந்தார். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் படுகொலையுடனும் இவர் தொடர்புபட்டிருந்தார்.
இவரைக் கொலைசெய்வதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த முயற்சிகளிலெல்லாம் தப்பிய இவர், தொடர்ந்து குடாநாட்டில் உள்ள இளைஞர்களை சுட்டுக்கொலை செய்வதில் தீவிரம் காட்டிவந்தார்.
இந்நிலையில், கொக்குவிலில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய் மாலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.