கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன் முறைகள் அதிகரித்துள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய 38 வன்முறைகள் குறித்து இதுவரை தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வியக்கம் தெரிவித்தது.
மட்டக்களப்பு-18, திகாமடுல்ல-11, திருகோணமலை-9 என்ற அடிப்படையிலும் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் நெருங்கும் சமயம் வன்முறை மேலும் அதிகரிக்கும் சாத்தியமிருப்பதாகவும் இயக்கம் மேலும் சுட்டிக்காட்டியது.
இதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்கான பூரண அதிகாரத்தை தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் தயானந்தா திசாநாயக்கா வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் இயக்கம் தேர்தல் கண்காணிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதுடன், நடமாடும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள வணக்கஸ்தலங்கள் மூலமாக வரும் தகவல் வலையமைப்பின் மூலம் தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.