கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை அக்கரைப்பற்று நகரில் தாக்கப்பட்டதுடன் நேற்று முன்தினம் மாலை அவரது ஆதரவாளர்களும் பலத்த தாக்குதலுக்கிலக்காகியுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் பெரிதும் சூடு பிடித்துள்ளதால் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. ர நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அக்கரைப்பற்று புதுப்பள்ளி பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.உவைஸின் ஆதரவான பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வேளையில் அங்கு வந்த ஒரு கோஷ்டி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அங்கு இரு தரப்புக்குமிடையே கைகலப்பேற்பட்டதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நால்வர் காயமடைந்தனர்.
எனினும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தவர்கள் இந்தக் கோஷ்டியை விரட்டிக் கலைத்தனர்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த முஸ்லிம் காங்கிரஸினர் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரது கோஷ்டியே இத் தாக்குதலை நடத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
இதே நேரம், நேற்றுக் காலை அக்கரைப்பற்று சந்தையில் வேட்பாளர் உவைஸ் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கோஷ்டியொன்று வேட்பாளரைத் தாக்கியதுடன் அவரது ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் கைகலப்பைத் தடுத்து நிறுத்தி இரு தரப்பையும் அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.
அமைச்சர் ஒருவரது ஆதரவாளர்களே தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முஸ்லிம் காங்கிரஸினர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.