*பகவதியின் கடிதமே முக்கியம் என்கிறார் சமரசிங்க
சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் உறுப்பினர் சேர்.நைஜெல் ரொட்லி இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள கூற்றுகள் குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லையென தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, தமக்கு பகவதி கையொப்பமிட்டு அனுப்பிய கடிதமே முக்கியமானதெனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் தலைவர் கடந்த 26ஆம் திகதி இலங்கை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இக்கடிதம் மூலம் அவர் முன்னர் தெரிவித்த கருத்துகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
எனினும் தமது மாண்புமிக்கோர் குழுவின் உறுப்பினர்களை மேற்கோள்காட்டி இலங்கை அரசாங்கம் வெளியிடும் அறிக்கை குறித்து ஊடகவியலாளர் பொறுப்புடன் செயற்படுவது அவசியமென குழுவின் உறுப்பினரான நைஜெல் ரொட்லி தெரிவித்திருந்ததுடன், தாம் முன்னர் தெரிவித்த கருத்துகளிலிருந்து பின்வாங்காது அக்கருத்தினையே தொடர்ந்தும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் கேட்டபோது;
மாண்புமிக்கோர் குழுவின் தலைவராக செயற்பட்ட பகவதி தான் எமக்கு கடிதமனுப்பியிருந்தார். அக்கடிதத்தின் பிரதியை நாம் ஊடகவியலாளர்களிடமும் சமர்ப்பித்தோம்.
பகவதி தமது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமையை சாதாரண ஆங்கில அறிவுள்ள ஒருவரினால் கூட மிக இலகுவில் அக்கடிதத்தை வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு குழுவின் தலைவர் தெரிவிக்கும் கூற்றுகள் தான் அக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும். குழுவின் உறுப்பினர் தெரிவிக்கும் கூற்று இரண்டாம் பட்சமாக கருதப்படுவதுடன், அது குழுவின் தீர்மானமுமாகவும் கருதப்படுவதில்லை. இந்நிலையில் சேர்.நைஜெல் ரொட்லியின் கூற்றுகள் எமக்கு பிரதானமானதல்ல. குழுவின் சார்பில் பகவதி ஜனாதிபதிக்கனுப்பிய கடிதமே பிரதானமானது என்றார்.
இதே வேளை, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதற்கு மாற்றமாக சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் கூற்றுகளும் மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்துமென எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.