*இந்திய உச்சநீதிமன்றில் மேன்முறையீடு
தைப்பொங்கல் தினத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றியமைப்பதற்கான சட்டமூலப் பிரேரணை தமிழக மாநில சட்டசபையில் சட்ட மூலமாக நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அத்தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் புதுவருடத்தை தை முதலாம் திகதியான தைப்பொங்கல் தினத்தன்றே கொண்டாடப்பட வேண்டுமெனும் தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தொடர்பான தமிழக அரசின் சட்டமூலப் பிரேரணையை இடைநிறுத்தி வைக்கவேண்டுமென சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் சமூக சேவையாளரான கே.ஆர்.இராமசுவாமி என்பவர் சென்னை மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருக்கிறார்.
இவ்விடயம் தொடர்பில் சென்னை மேல் நீதிமன்றில் இராமசுவாமியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தமைக்கு எதிராகவே உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மேல் நீதிமன்றமானது இவ்வழக்கினை தள்ளுபடி செய்துள்ள அதேவேளை நாட்டின் நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் நாடு தமிழ்ப் புத்தாண்டு 2008 சட்ட மூலத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தமைக்காக இராமசுவாமிக்கு பத்தாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் தன்மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் குறித்தும் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் இராமசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக உச்சநீதிமன்றில் இராமசுவாமியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில்;
தமிழ் புதுவருடமானது சித்திரை முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இச்சித்திரை மாதத்தையே ஹிந்தியில் சைத்ரா எனக் கூறப்படுகின்றது.
ஆனால், சென்னை மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தமிழர் புதுவருடமானது தை முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சட்டமூலமானது உரிய முறையில் நிறைவேற்றப்படாததுடன் எந்தவொரு இந்திய சட்ட விதிகளுக்கும் உட்படாததென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எமது நினைவுக்கெட்டிய காலம் தொட்டு சித்திரை முதலாம் திகதியையே உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன், தமிழ்ப் புத்தாண்டை தை முதலாம் திகதி அனுஷ்டிக்கும் இச்சட்டமூலமானது வான் சாஸ்திரம், பௌதிகக் கூற்றுகள் மற்றும் கணிதக் கணிப்பீடுகள் போன்றவற்றை பாதிக்கும் என்பதுடன் தமிழக அரசின் நடவடிக்கையானது தமிழ் புதுவருடத்தின் புனிதத் தன்மையை அழிக்கும் என்றும் இராமசுவாமி தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.