*வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையீடு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக வாழைச்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை காலை பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம், ஆயுதக் குழுவொன்றால் கடுமையாக அச்சுறுத்தப்பட்ட நிலையில் தனது பிரசாரத்தை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டது.
இத்தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க.வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிழக்கில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதனொரு கட்டமாகவே ஐ.தே.க.முக்கியஸ்தர்கள் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது கே.வேலாயுதம் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றுக்காலை இவர்கள் களுவன்கேணி பகுதியில் பிரசாரத்திலும் துண்டுப்பிரசுர விநியோகத்திலும் ஈடுபட்டிருந்த போது அங்கு வாகனமொன்றில் வந்த ஆயுதக் குழுவினர் தங்களை மிரட்டியதாக வேலாயுதம் தெரிவித்தார்.
இதையடுத்து தாங்கள் அங்கிருந்து விலகி கொண்டையன் கேணிபகுதிக்குச் சென்ற போது மோட்டார்சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்த ஆயுதக் குழுவினர் மிரட்டவே பிரசாரத்தை தொடராது நிறுத்திவிட்டு ஓட்டமாவடிப் பகுதிக்கு திரும்பினோம். அப்போது கூட எனது வாகனத்தை பின் தொடர்ந்து வாகனமொன்றில் சிலர் வந்தனரெவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.