மே தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பாதுகாப்பு முழு அளவில் பலப்படுத்தப்பட்டிருக்குமென பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதாலேயே அவற்றுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணி அம்பாறை தெகியத்த கண்டியவிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான சமய நிகழ்வு களனி ரஜ மஹா விகாரையிலும் நடைபெறும்.
அதேநேரம், ஜே.வி.பி.யின் மே தின நிகழ்வு கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேநேரம், வேறு சில கட்சிகளும் அமைப்புகளும் மே தினப் பேரணிகளை கொழும்பில் நடத்தவுள்ள அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேரணியும் கூட்டமும் நுவரெலியா மாவட்டம் கொட்டகலையில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மே தின நிகழ்வில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையிலீடுபடுவரெனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதேநேரம், பேரணிகள் நடைபெறும் பகுதியில் நிலைமைகளை விமானப் படை ஹெலிகொப்டர்கள் கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.