பயங்கரவாத சவாலை வெற்றி கொண்டு நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தினர் தம்மோடு ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மேதினச் செய்தியில் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அந்த மேதினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இலங்கை வாழ் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
மகிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தைப் பலப்படுத்துவதனூடாக எமது நாட்டின் அபிவிருத்திக்கு எமது தொழிலாளர்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுவதோடு இது வளமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையையும் அளிக்கின்றது.
எமது தொழிலாளர்கள் நாட்டுக்கு பல அடைவுகளை ஈட்டித் தந்துள்ளனர். அந்த கௌரவத்தை தொழிலாளர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள முடியுமாக இருப்பது எனது அதிஷ்டமாகும். மக்களின் அபிலாஷைகளைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு சரியான பாதையில் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள எமது நடவடிக்கைகளினால் அவர்கள் கௌரவப்படுத்தப்படுகின்றனர் என நான் நம்புகிறேன்.
தொழிலாளர்கள் இன, மத, குல மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஐக்கியமாக இருப்பது நாட்டுக்குப் பெரும் சக்தியாகும். நாட்டில் சமாதானம் சீர்குலையும் போது தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளுமே அதிகம் அல்லல்படுகின்றனர். பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு அவர்கள் அரசாங்கத்துடன் நடந்துகொள்வது இந்த விடயத்தை புரிந்து வைத்துள்ளமையே காட்டுகிறது. இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுபிட்சத்தைக் கொண்டுவருவதற்கான கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதனாலேயே நாம் பொதுத்துறை ஊழியர்களைப் பலப்படுத்தும் அதேவேளை, தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளைக் காப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மக்கள் சார்பு அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதனூடாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம். நாம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, நிலையான சமாதானத்தை அடைவதற்கான சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தொழில் புரியும் மக்களின் தொடரான ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடிய புதியதோர் இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.