*சாடுகிறார் பசில் ராஜபக்ஷ
ரணில் விக்கிரமசிங்கவும், ரவூப் ஹக்கீமும் கிழக்கு மாகாண மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும், எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ, கிழக்கில் அமைதிச் சூழலை ஏற்படுத்திய பெருமை ஐ.ம.சு.முன்னணி அரசையே சாருமென குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளது. கட்சிகள் தற்போது அங்கு தீவிர பிரசாரப் பணியில் ஈடுபட்டுள்ளன. அமைதியான சூழ்நிலையில் சகல விடயங்களும் நடைபெறுகின்றன.
அமைதிச் சூழல் அங்கு நிலவுகின்றமைக்குச் சான்றாக அரசியல் கட்சிகள் சுதந்திரமாக பிரசாரப் பணியில் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு கூறலாம் ரணில் விக்கிரமசிங்க கூட வீதிவழியாக கிழக்கு சென்று அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கும் எமது அரசாங்கமே காரணம் அந்தப் பெருமை எம்மையே சேரும்.
இது மாத்திரமல்லாமல் கிழக்கில் மிகக்குறுகிய காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் நலனுக்காக பல வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
கிழக்கில் இப்போது கிபீர் விமானங்கள் குண்டு வீசுவதில்லை. ஆட்டிலறி சத்தங்கள் ஒலிப்பதில்லை. மல்டி பரல் உபயோகிக்கப்படுவதில்லை. பலாத்கார கப்பம், ஆட்கடத்தல் என்பனவும் அடியோடு இல்லை. மீன்பிடித்தடை நீக்கப்பட்டுள்ளது இரவு வேளையில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைக்குரிய நிர்வாக அதிகார ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்குமாயின் மேலும் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை எம்மால் மேற்கொள்ள முடியும்.
கிழக்கு மாகாணத்தை விடுவித்து, அங்கு அமைதியை ஏற்படுத்தியவர்கள் என்ற பெருமையைப்பெற்ற நாம் அம்மாகாண மக்களிடம் வாக்குகளை கோர முதற்தர தகுதியைப் பெற்றுள்ளோம்.
எனினும் ரணில் மற்றும் ஹக்கீம் ஆகியோர் கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த முயலுகிறார்கள். தேர்தலில் அம் மக்களின் வாக்குகளை மாத்திரம் இலக்காக கொண்டு, குறுகியநோக்குடன் செயற்படும் இவ்விருவரினதும் திட்டங்கள் குறித்து மக்கள் போதிய விழிப்புடன் செயற்படுவது அவசியமாகும்.
கிழக்கு முதலமைச்சர் குறித்து ஆளும்கட்சி பங்காளிகளிடையே எத்தகைய முரண்பாடுமில்லை. மாகாண அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் ஆளும் தரப்பு முனைப்புடன் செயற்படுகிறது. மாகாண மக்கள் எம்பக்கம் உள்ளமையால் எமது முயற்சி இலகுவாக அமையுமென்றார்.