*திருமலையில் ரணில்
மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் இடம்பெற்றதொரு காட்சிதான் இன்று கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று, திருகோணமலை முற்ற வெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மேலும் தனது உரையில்,
பாண்டவர்கள் அதிகாரப் பகிர்வு கேட்டார்கள். நூறு சகோதரர்களுடன் ஆட்சி நடத்திய துரியோதனன் மறுத்தான்.
பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் துரியோதனாதியர்களைச் சந்தித்தனர், அப்போது கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் நடக்கிறது. பாண்டவர் வென்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நான் இத்துடன் ஒப்பிடுகிறேன்.
கிழக்கு மாகாணத்தை ஆயுதக் கலாசாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஆயுத கலாசாரத்திற்கு நாம் அடிபணிய முடியாது. அச்சுறுத்தல், அடாவடித்தனங்களுக்குப் பயந்து தினமும் கப்பம் செலுத்தி வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது ஆட்சியாளருக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது. வங்குரோத்து நிலையை நோக்கிச் செல்லும் இவ்வரசு வாக்காளர்களை அச்சுறுத்தி வெற்றியீட்டலாம் என்று எண்ணுகிறது.
இலங்கையன் என்ற முறையில் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது ஒரே நோக்கமாகும். ஆளுமை நிறைந்த தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வர முடியும்.
இலங்கையில் கிழக்கு மாகாணம் ஒன்றில் மட்டுமே மூன்று இனங்களைச் சேர்ந்த மக்களும் சமமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். எனவே, கிழக்கு மாகாண மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வு நாட்டிலே வாழ்கின்ற அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு தீர்வாக அமையும். அவ்வாறான ஒரு தீர்வை இந்த அரசினால் முன்வைக்க முடியாது. ஆயுதமேந்திய குழுக்கள் அவற்றை ஒப்படைப்பார்களாயின் அவர்களை அரசியல் சக்தியாக அங்கீகரிக்க முடியும்" என கூறினார்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன மஹ்ரூப் பேசுகையில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டர் வசதி மறுக்கப்பட்ட நிலையில் தரைவழியாக திருமலை வந்து பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றுகின்றார் எனக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செய்து கொண்டுள்ள இந்த உடன்படிக்கை, கிழக்கு மாகாணத் தேர்தலுடன் நின்று விடும் ஒன்றல்ல; பாராளுமன்றத் தேர்தலிலும் இத்தேர்தல் கூட்டு நீடிக்கும் என்றும் சின்ன மஹ்ரூப் குறிப்பிட்டார்.