ஹர்பஜன்சிங் - ஸ்ரீசாந்த் மோதல் விவகாரம் ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவர்கள் தங்கள் அணி வீரர்களை திட்டியதாக தென் ஆபிரிக்க அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்து ஆடியபோது 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. அப்போது ஹர்பஜன்சிங், தென் ஆபிரிக்காவின் பிரின்சை திட்டியிருக்கிறார். இது குறித்து போட்டி நடுவர் ரொசான் மகானாம விசாரணை நடத்திய போது, ஹர்பஜன்சிங் பிரின்சிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதேபோல் ஸ்ரீசாந்த், டிவில்லியர்சை தனிப்பட்ட முறையில் திட்டியிருக்கிறார். மொத்தத்தில் அவர்களது நடத்தை சிறப்பானதாக இருக்கவில்லை. இருப்பினும், எங்களது அணி நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று ஆர்தர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.