ஸ்ரீசாந்தை விமர்சித்த நடுவர் அடுத்த 2 ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 10 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்துக்கு கன்னத்தில் அறைவிட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன்சிங் 11 ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடுவர் ஒருவரும் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார். அந்த ஆட்டத்தில் நடுவராக அமிஷ் சாகேபா செயல்பட்டார். 48 வயதான சாகேபா ஆமதாபாத்தைச் சேர்ந்தவர். இந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்தின் நடத்தையை அவர் வெளிப்படையாக விமர்சித்தார். `போட்டி தொடங்கியதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களை ஸ்ரீசாந்த் திட்டத் தொடங்கிவிட்டார்.
இதனால், நானும் மற்றொரு நடுவர் அலிம்தாரும் அவரை 2 ஆவது முறை எச்சரித்தோம். கப்டன் என்ற வகையில் யுவராஜ்சிங்கையும் எச்சரித்தோம்' என்று மும்பை பத்திரிகைக்கு சாகேபா பேட்டியளித்திருக்கிறார்.
இதையடுத்து ஸ்ரீசாந்தை நடுவரே வெளிப்படையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐ.பி.எல். முடிவு செய்தது. இதன்படி நடுவர் சாகேபா அடுத்த 2 ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பத்திரிகை பேட்டியில் என்ன சொன்னீர்கள் என்பது குறித்து விளக்கமளிக்கும்படி இந்திய கிரிக்கெட் சபை அவருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. 48 மணி நேரத்திற்குள் அவர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஸ்ரீசாந்தின் நடத்தை பற்றி அவர் போட்டி நடுவருக்கு தான் புகார் செய்திருக்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் சபைச் செயலாளர் நிரஞ்சன்ஷா தெரிவித்தார்.