சச்சின் ,ஹர்பஜன் இல்லாமல் சாதித்துக் காட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில் பிராவோவின் அதிரடி கைகொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் ஐ.பி.எல்.தொடரில் மும்பை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது. காயம் காரணமாக சச்சினும் தடையால் ஹர்பஜனும் இடம்பெறாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் பொறுப்பை மீண்டும் பொலக் ஏற்றார். நாணயச் சுழற்சியில் வென்ற கங்குலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்த மும்பை அணி முதல் வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் பொலக். 3 ஆவது பந்தில் கப்டன் கங்குலியை (4) ஆட்டமிழக்கச் செய்தார். 5 ஆவது பந்தில் ஆபத்தான மெக்கலத்தை (1) வெளியேற்றினார். அடுத்து வந்த தாஸ் அதிரடியாக விளையாடினார். நெஹ்ரா ஓவரில் இரண்டு பவுண்டரி பொலக் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். பின்னர் டில்ஹாரா பெர்னாண்டோ ஓவரிலும் இரண்டு பவுண்டரி விளாசினார். இவர் பிராவோ வேகத்தில் 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க சிக்கல் ஆரம்பமானது.
ஜெயசூரியா சுழலில் டேவிட் ஹசி (17 ) சிக்கினார். பொண்டிங் மீண்டும் சொதப்பினார். இவர் 19 ஓட்டங்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டானார். முகமது ஹபீஸும் (2) , ஜெயசூரியா வலையில் வீழ்ந்தார். இப்படி விக்கெட்டுகள் மளமளவென சரிய கொல்கத்தா அணி 13.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்கள் எடுத்து திணறியது.
கடைசிக் கட்டத்தில் லட்சுமி ரத்தன் சுக்லா அதிரடியாக ஓட்டம் எடுத்தார். பிராவோ வீசிய 15 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். பெர்னாண்டோ வீசிய 18 ஆவது ஓவரில் இன்னொரு சிக்சர் விளாசினார். இறுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 22 பந்தில் 40 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 2 சிக்ஸ்) எடுத்த லட்சுமி ரத்தன் சுக்லா ஆட்டமிழக்காமலிருந்தார்.
இலகுவான இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜெயசூரியா அதிரடித் தொடக்கம் கொடுத்தார். இஷாந்த் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். அடுத்த ஓவரிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். இதற்கு அடுத்த பந்தில் ஜெயசூரியாவை (18 ) போல்டாக்கி பழி தீர்த்தார் இஷாந்த் . அடுத்து வந்த பாண்டே `டக்' அவுட்டானார். இதற்கு முன் பிராவோ, உத்தப்பா இணைந்து கலக்கினர். விவேகமாக விளையாடிய இவர்கள் இம்முறை அணிக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொண்டனர்.
மோசமாக வீசப்பட்ட பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினர். ஹபீஸ் வீசிய 9 ஆவது ஓவரில் உத்தப்பா இரண்டு பவுண்டரி அடிக்க 16 ஓட்டங்கள் கிடைத்தது. முரளி கார்த்திக் வீசிய 13 ஆவது ஓவரில் வெளுத்து வாங்கினார் பிராவோ. இரண்டு பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார்.
இவர்களது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிராவோ 64 ( 8 பவுண்டரி, 1 சிக்சர்) , உத்தப்பா 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.