இலங்கை படுமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து நீண்டகாலமாக மீளமுடியாமல் இருப்பதற்கு உள்நாட்டுப் போரே பிரதான காரணமாக இருந்து வருகின்றது என்ற போதிலும், போரைத் தீவிரப்படுத்திக் கொண்டே பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தங்களால் முன்னெடுக்கக்கூடியதாக இருப்பதாக இன்றைய ஆட்சியாளர்கள் பெருமை பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அன்றாடம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்ளுமாறு ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியிருக்கும் நிலையில் போருக்காக பெருந்தொகை நிதி தொடர்ந்தும் செலவிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரினால் மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளை மாத்திரமல்ல, பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற வேதனைமிகு நிலைவரத்தையும் கூட சிந்தித்துப் பார்க்கத் தயாரில்லாதவர்களாக இன்றைய ஆட்சியாளர்களைக் காண்கிறோம்.
இத்தகையதொரு சூழ்நிலையிலே கடந்த 15 வருட காலத்தில் ஆபிரிக்கா கண்டத்தில் போர்களினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. போர்களினால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் 23 ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒக்ஸ்பாம், சேபர்வேர்ல்ட், சிறியரக ஆயுதங்கள் தொடர்பான சர்வதேசக் கட்டமைப்பு என்ற மூன்று அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் ஆய்வொன்றை நடத்திய பின்னர் `ஆபிரிக்காவின் காணாமல்போன கோடிகள்' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
15 வருடகாலப் போர்களினால் ஆபிரிக்காவுக்கு 40,000 கோடி டொலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தொகை இதே காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகளினால் பெறப்பட்ட வெளிநாட்டு உதவிக்குச் சமமானதாகும். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 23 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் வருடாந்தம் 1,850 கோடி டொலர்கள் இழப்பு சராசரியாக ஏற்பட்டிருக்கிறது. இந்நாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி வருடாந்தம் சராசரியாக 20 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அக்கண்டத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளில் குழந்தைகளின் மரண வீதம் 50 சதவீதம் அதிகம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. போஷாக்கின்மையால் பீடிக்கப்பட்டிருக்கின்ற மக்களின் வீதம் 15 சதவீதம் அதிகமானதாகும். வயது வந்தவர்களின் கல்வியறிவைப் பொறுத்தவரை இந்த நாடுகளில் 20 சதவீதம் வீழ்ச்சி காணப்படுகின்றது. சராசரி ஆயுட்காலமும் 5 வருடங்களினால் குறைவடைந்திருக்கின்றது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 23 நாடுகளிலும் சண்டைகளில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையை விட போரின் விளைவான பொருளாதார அவலங்களினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 14 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் அரைவாசி நாடுகள் 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள் நாட்டுப் போர்களில் அல்லது மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றன. ஒருதசாப்தத்துக்கும் கூடுதலான காலமாக வெளிநாட்டுப் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுப் போரினால் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மாத்திரம் சுமார் 40 இலட்சம் மக்கள் இறந்திருக்கின்றார்கள். நிகர உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. படுமோசமாகப் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளில் எரித்திரியா, புரூண்டி, ருவாண்டா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தளவு பாரிய தொகை பொருளாதார இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத உலகின் மிகவும் வறிய பிராந்தியம் போர்களில் இருந்து மீளவோ அல்லது மீண்டவை கூட நிரந்தர அமைதியைக்காணவோ முடியாதவையாக இருக்கின்றன.
ஆயுத மோதல்களினால் ஏற்படக் கூடிய பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து பரந்தளவிலான ஆய்வொன்று ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையென்றும் கூறப்படுகின்றது. ஆபிரிக்க மக்களை அவலத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இந்தப் போர்களினால் அரசாங்கங்களும் தலைவர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் பெரும்பயன் அடைந்திருக்கின்றார்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களை இலங்கையர்களாகிய நாம் கவனத்திற்கெடுப்பது பிரயோசனமாக இருக்கும். ஆனால், கடந்த கால சரித்திரத்தில் இருந்து பாடமெதையுமே படிக்காத இலங்கையர்கள் போர்கள் புகட்டியிருக்கும் பொருளாதாரப் பாடங்களை படித்துத் தங்களைத் திருத்தக் கூடிய அளவுக்கு பக்குவமடைவர்கள் என்று எதிர்பார்க்க நாதி உண்டா?