குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள் என்று தத்துவஞானி சோக்கிரட்டீஸ் ஆசிரியர்களுக்குக் கூறினார். தசரதனின் மகன் என்பதை விட வசிட்ட முனிவரின் மாணவன் என்பதில்தான் இராமனுக்குப் பெருமை அதிகம். இவ்வாறு தொழில் அதிபர் இ.மகேந்திரராஜா திருகோணமலை ஷ்ரீ சண்முகா இந்து மகளிர் (தேசிய) கல்லூரியின் ஸ்தாபகர் தின விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொழில் அதிபரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினருமான மகேந்திரராஜா தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
இப்பாடசாலையை ஸ்தாபித்த தங்கம்மா சண்முகம்பிள்ளை அம்மையார் திருகோணமலையின் கல்வித்துறை வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளார். அவர் அன்று என்ன நோக்கத்துடன் இப்பாடசாலையை ஸ்தாபித்தாரோ அந்த நோக்கத்தைப் பூரணமாக நிறைவேற்றுவதில் இன்றைய அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை மகிழ்வைத் தருகிறது.
குழந்தைகளுக்கு உடல் வடிவத்தை அளிப்பவர் பெற்றோர் . உள்ளத்தை வடிவமைப்பவர் ஆசிரியர்கள். அதனால் தான் குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் என்று தத்துவஞானி சோக்கிரட்டீஸ் கூறினார். மாணவர் மேல் ஆசிரியர் காட்டும் அன்பு, இரக்கம் போன்ற பண்புகளே மாணவர் மனதில் படிகின்றன.
வீட்டுக்கு விருந்தினர்களாக வருபவர்கள் தங்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் மாணவரைப் பார்த்து எந்தப் பாடசாலையில் படிக்கின்றாய்? உன் ஆசிரியர் யார் ? என்று தான் கேட்பார்கள்.
தசரதனின் மகன் என்பதை விட வசிட்டனின் மாணவன் என்பதால்தான் விஸ்வாமித்திரர் இராமனை ஜனகமகாராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதனால் தான் ஜனகன் தனது மகள் சீதையை இராமனுக்கு மணமுடித்து வைக்கச் சம்மதித்தார்.
"மாணவனின் பண்பு, நலன் ஆசிரிய சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்றால் வகுப்பறையின் விரிவாக்கம் தான் நாடு. மாணவர் தங்களின் முன்னேற்றத்திற்கு தங்களின் திறமையே மூலதனம் என்று எண்ணிச் செயற்பட வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை அவை விளையாட்டு ,படிப்பு, ஓவியம், இசை, நடனம் ஆகிய எத்துறைகளாக இருப்பினும் அவற்றை முழுமையாக மாணவர் பயன்படுத்த வேண்டும்.
திறமை எந்தத் துறையில் உள்ளது என்பதைக் கண்டறிந்து தன்னம்பிக்கை மற்றும் துணிவோடு பங்கேற்றுக் கொண்டால் அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதை மாணவ சமுதாயம் நினைவிற் கொள்ள வேண்டும்.
உழவனுக்கு விதைக்கும் காலம் எவ்வளவு முக்கியமானதோ அது போலவே மாணவனுக்குக் கற்கும் காலம் அமைகிறது. நேரத்தை உழைப்பாக மாற்றவில்லை என்றால் வெற்றி என்பது ஒரு போதும் கிடைக்காது. விதைக்காமல் அறுவடை செய்ய முடியாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும் என்றார்.
கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியை செல்வி மணிமேகலை கார்த்திகேசு சிறப்புரை நிகழ்த்தினார். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்பத்தில் அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் , கல்லூரியின் ஸ்தாபகர் திருமதி தங்கம்மா சண்முகம்பிள்ளையின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
ஸ்தாபகர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கான பரிசுகள் தொழில் அதிபர் மகேந்திரராஜா தனது தந்தையான அமரர் இராஜரத்தினம் நினைவுப் பரிசில் என்ற பெயரில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
வர்ணம் தீட்டுதல், கட்டுரை, ஆக்கம் மற்றும் போட்டிகளில் பாடசாலை மட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு அமரர் இராஜரத்தினம் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.