இலங்கை வங்கி நாடு முழுவதும் பொருளாதார மேம்பாடு குறைந்த முந்நூறு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அக்கிராமத்தை பொருளாதர வலுவுள்ள கிராமமாக மாற்றியமைக்கும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இத்திட்டம் யாழ். மாவட்டத்தில் இம்மாதம் 12 ஆம் திகதி வைபவரீதியாக கரணவாய் மேற்கு சனசமூக நிலையத்தில், இலங்கைவங்கி அதிகாரிகளால் ஆரம்பித்துவைக்கப்படும்.
இத்திட்டத்தில் நெல்லியடி இலங்கை வங்கிக்கிளையினால், கரணவாய் மேற்கு சோளங்கன் கிராமம் தெரிவு செய்யப்பட்டு இலங்கைவங்கியின் மாதிரிக் கிராமமாக தத்தெடுக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் அறுபத்தைந்து குடும்பங்கள் விவசாயத்தையே ஜீவனோபாய வருமானமாக கொண்டவர்கள். இலங்கை வங்கி இக்கிராமத்தில், சகலவிவசாயிகளுக்கும் விவசாயக் கடன், கால்நடைவளர்ப்புக்கடன், சுயதொழில் முயற்சிக் கடன், உயர் கல்விஉபகாரக் கடன், பாடசாலை மாணவர்களுக்கான கல்விப்புலமைப்பரிசில் ஆகிய நிதி ஆதாரங்களை வழங்கி மக்களின் பொருளாதார சுபிட்சத்துக்கு உதவவுள்ளது.
இவற்றைவிட வங்கி சம்பந்தமான அறிவை மேம்படுத்த பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை வங்கி கரணவாய் சோளங்கன் கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்வையொட்டி அன்றையதினம் இக்கிராமத்தில் விளையாட்டு விழாவொன்று ஏற்பாடாகியுள்ளது.
இவ்விழாவுக்கு பிரதமவிருந்தினராக வடபிராந்திய இலங்கை வங்கி செயற்பாட்டு முகாமையாளர் என். சிவரெட்ணம் கலந்துகொள்வார்.