வடமாகாணத்திற்கான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான விஷேட செயற்பாட்டுக் குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மக்கள் மேம்பாட்டிற்கான துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறார்.
வடமாகாண மக்களது மேம்பாட்டிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது அதன் முதற்கட்டமாக 2008 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு உட்பட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
விடுவிக்கப்படாத கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான மனிதாபிமான அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தற்போது இனங்காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்து வருகின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 50201 குடும்பங்களைச் சேர்ந்த 195015 பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 54187 குடும்பங்களைச் சேர்ந்த 220329 பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 20 வருடகால தொடர் யுத்தம் காரணமாக இம்மாவட்டங்களில் எத்தகைய உரிய அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள், சுகாதார வசதிகள், கிராமிய வீதிகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், குளங்கள் அபிவிருத்தி, கடல்நீர் தடுப்பு அணைகள் நிர்மாணம்,வாய்க்கால்கள், கட்டடங்களும் மற்றும் வீடுகள் புனரமைப்பு நடவடிக்கைகள், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வசதி, மீன்பிடித் தொழில் அபிவிருத்தி, மின்சார வசதிகள், பெருந்தெருக்கள் அபிவிருத்தி, போன்ற பல்வேறு விடயங்களில் தொடர்பில் தற்போது இனங்காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுப்பதே வடமாகாண விசேட செயற்பாட்டுக் குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவின் முதற்கட்ட நடவடிக்கைகயாக அமைந்துள்ளது.
இதுவரையில் விடுவிக்கப்படாத இம்மாவட்டங்களில் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலான காலமாக மக்கள் அடிப்படை,மற்றும் அன்றாட வசதிகள் இன்றி மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் கடினமானதொரு வாழ்க்கையை மேற்கொண்டு வருவதால் அம்மக்களை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த மனிதாபிமான வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதே நேரம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிலவுகின்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் இதுவரையில் உரிய அவதானங்களைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த இரு மாகாணங்களினதும் மனிதாபிமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது எதிர்பார்ப்பாக உள்ளது. இதே நேரம் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு அம்மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களினதும் மக்கள் மேம்பாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.