"ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் என்றுமே காணாத அபிவிருத்தியை கண்டு வருகின்றது" என கிரிக்கெட் கட்டுப்பாட்டு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; "ஏராளமான மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற எமது ஜனாதிபதி அதிகளவிலான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வதை அனைவரும் அறிந்துள்ளீர்கள். பல வருடங்களாக பின்னடைவு கண்டுள்ள கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய நோக்கம், எதிர்பார்ப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அந்த வகையில் விடுபட்ட அபி விருத்தி வேலைகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே, 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவு களே இத் துரித அபிவிருத்தி வேலைகளைச் செயற்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
என்னிடம் இன, மத வேறுபாடு கிடையாது. கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்தபோது இனங்களுக்கிடையில் எந்த வேறுபாடும் காட்டாமல் தான் எனது தலைமைப் பதவியை வகித்தேன்.
இலங்கையின் கிரிக்கெட் துறையை 5 பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய விளையாட்டுத் துறைகளையும் கிழக்கு மாகாண சபையினூடாக முன்னெடுத்துச் சென்று அதன் மூலம் தேசிய மட்டத்தில் பங்கு கொள்ளக்கூடிய வீரர்களைக் கிழக்கு மண்ணில் இருந்து தோற்றுவிக்கவுள்ளோம்.
நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் விளையாட்டுத் துறையில் பாரிய அபிவிருத்தியொன்றை கிழக்கு மாகாணத்தில் காணமுடியும்" எனக் குறிப்பிட்டார்.