இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச வலைப்பின்னல் ஊடாக ஆங்கில பாட கற்கை நெறியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு, ப்ளவர் டெரஸ்டில் அமைந்துள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் அமைச்சரும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவருமான முத்துசிவலிங்கம், ஆந்திராவிலுள்ள டெக்கோ இம்போ மெட்டிக் பிரைவேட் லிமிட்டெட்டின் பணிப்பாளர் ஜி.இராமச்சந்திரனும் கைச்சாத்திட்டனர்.
சர்வதேச வலைப்பின்னல் மூலமாக முதன்முறையாக இலங்கையில் ஆங்கில பாடநெறி கற்கை நடைபெறுவது சரித்திர சிறப்புமிக்கதாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 43 பிரஜாசக்தி நிலையங்களின் மூலம் இப்பாடநெறி நடைபெறவுள்ளது.
வார இறுதி நாட்களில் பிரஜாசக்தி நிலையங்களுக்கு வருகைதரும் மாணவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்ய இது மிகவும் உதவும். கணினித்துறையில் மலையக மக்களின் அறிவை விருத்தி செய்ய இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் 43 தோட்டங்களில் உள்ள பிரஜா சக்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
இதனூடாக பல்வேறு பயன்களைப் பெற்றுவரும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும அவர்களது பிள்ளைகள், தத்தமது ஆங்கில அறிவை வளர்க்கும் முகமாக இச்செயற்றிட்டமும் உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.