* சம்மாந்துறை கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமக்கு கிடைக்கும் வெற்றியைத் தொடர்ந்து ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு திங்கட்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இங்கு திரண்டிருக்கும் சன சமுத்திரத்தைப் பார்க்கும் போது எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எண்ணிப்பார்க்க முடியாத வெற்றியை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்படுத்தி இருக்கும் இந்த கூட்டமைப்பு பெறப் போகின்றது என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.
உண்மையிலேயே இன்று முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், என்றுமே முஸ்லிம் மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்துள்ளது.
மூன்று சமூகங்களும் சேர்ந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நிலைமை ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருக்கின்றது. இந்த தேசிய சமாதானத்தை எதிர் வரும் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த தேர்தலை அரசாங்கம் நடாத்த தீர்மானித்த போது ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக சேரும் என்று அரசாங்கம் கனவிலும் கூட எதிர்பார்க்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் போன்று தனிக்காட்டு ராஜாவாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணசபை ஆட்சியை கைப்பற்றலாம் என எண்ணி இருந்தவர்களுக்கு ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டு ஏமாற்றமாய் போய்விட்டது.
இன்று அரசாங்கத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அறிக்கைகளிலெல்லாம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிர்பாராத விதமான செல்வாக்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதனால் எம்மிடம் உள்ள வாக்குகளை பலாத்காரமாக பறிப்பதற்கு பாரிய சதித் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
நாங்கள் கிழக்கு மாகாண மக்களிடம் மன்றாடி கேட்கின்றோம். உங்கள் பொன்னான வாக்குகளை கொள்ளையடித்துச் செல்ல எவருக்கும் இடம் கொடுக்க வேண்டாம். மிகவும் அவதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் யானைக்கு வாக்களியுங்கள்.
இன்று இந்த அரசாங்கம் கிழக்கின் அபிவிருத்தியை பற்றித்தான் எல்லாவிடங்களிலும் பேசுகிறார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற 3 வருடங்களாக இதைப்பற்றி கவலைப்படாததன் மர்மம் என்ன?
இந்த வாக்கு மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயமும் தேவையும் இன்று எங்களுக்கு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.