* மு.கா.முதன்மை வேட்பாளர் ஹசன் அலி
இந்த மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றி பெற்றால் கிழக்கில் ஒரு முஸ்லிம் மாகாணம் உருவாக்கப் படுவதையும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உருவாவதையும் யாரும் தடுக்க முடியாது என்று அரச உயர்மட்டம் கூறியுள்ளது என்று எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
சம்மாந்துறையில் பிரதேச சபை உறுப்பினர் சுபைர் தலைமையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரி. ஹசன்அலி தெரிவித்தார்.
பெருந்தொகையான மக்கள் நிறைந்திருந்த அக்கூட்டத்தில் ஹசன்அலி தொடர்ந்து உரையாற்றுகையில் ;
பெருந்தேசிய கடும்போக்கு இனவாதிகள் தமிழ்பேசும் மக்களுக்குரிய தீர்வுத்திட்டத்தை நிறைவேற்றாமல் இந்தத் தேர்தலைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு எத்தனிக்கிறது இனவாத அரசு. தமிழர்களையும் முஸ்லிம்களையும் கடும்போக்காளர்கள் மோதவிட்டாலும் தமிழ்பேசும் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். பேரினவாதிகளையும் கடும் போக்காளர்களையும் அவர்கள் இனங்கண்டு வைத்திருக்கிறார்கள். அநீதிகளும் அதர்மங்களும் தொடர்வதை யாரும் விரும்பமாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்கள் பேரினவாதிகளுக்கு நிச்சயமாக உணர்த்துவார்கள்.
தமிழர்களும் , முஸ்லிம்களும் மோதினால் பகைமைக்கு அடிமையாகிவிட்டால் பேரினவாதம் அதில் குளிர்காயும். இருபது வருடங்களுக்கு முன் எமது தலைவர் அஷ்ரப் நிலத் தொடர்பற்ற முஸ்லிம்களை உள்ளடக்கிய முஸ்லிம் மாகாணத்தைத் தான் கோரினார். தமிழ், முஸ்லிம் உறவை மிகவும் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் பேணிவந்த அஷ்ரப் தமிழ்பேசுகின்ற மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான நோக்கங்களில் ஒன்று நாட்டின் சமாதானமும் இனங்களின் ஒற்றுமையுமாகும்.
குறிப்பாக சிறுபான்மையினங்களின் ஒற்றுமையில் தான் கிழக்கின் விடிவு தங்கியுள்ளது. அந்த விடிவை ஏற் படுத்த விடாமல் நீதிமன்றத்தின் துணையுடன் பேரினவாத சக்திகள் கிழக்கைப் பிரித்து தேர்தலை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அதர்மத்துக்கும், அநீதிகளுக்கும் அடக்குறைகளுக்கும் துணைபோன வரலாற்றை மாற்றுகின்ற மாபெரும் சக்தி வாக்காளர் தான்.
சமாதானத்தையும் அகிம்சையையும் நேசிக்கின்ற அதற்காகப் போராடி வருகின்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்தால் தமிழ்பேசும் மக்களுக்குத் தாயகக் கோட்பாடு தேவையில்லை. அவர்கள் அரசாங்கத்தை நேசிக்கிறார்கள் என்று சர்வதேசத்துக்குச் சொல்லி விடுவார்கள். கிழக்கில் ஜனநாயகமும் , சமாதானமும் இருக்கின்றன என்று உலகம் நம்பிவிடும்.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த நாட்டின் மாபெரும் அரசியல் சக்தியை எதிர்வரும் 10 ஆம் திகதி நீங்கள் இன்னும் பலப்படுத்த வேண்டும். உங்கள் பலந்தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளம். இதை நீங்கள் இந்தத் தேர்தல் மூலம் உலகுக்கு உணர்த்த வேண்டும்.
இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகார அலகுடன் கூடிய பிரதேசங்கள் பிரித்துக் கொடுக்கக் கூடாது என்று பேரினவாத கடும்போக்குடைய கட்சிகள் கூறுகின்றன.
இந்த மண்ணைக் கடும் போக்காளர்களிடமிருந்து காப்பாற்றத்தான் நாங்கள் தேர்தல் களத்தில் எங்கள் உயிர்களையும் பதவிகளையும் துச்சமாக மதித்து இறங்கியுள்ளோம்.
ஐ.தே.கட்சி மிதவாதக் கட்சி சிறுபான்மையினரின் நிம்மதியையும் சமாதானத்தையும் விரும்புகிற கட்சி. அதிகார அலகுடன் கூடிய பிரதேசங்கள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சி ஐ.தே.கட்சி. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளையும் கொள்கைகளையும் ஐ.தே.கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. எனவே, தமிழ்பேசும் மக்கள் எங்கள் பலம், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் வளம் என்றார்.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அன்சார் மௌலானா உட்பட பலரும் உரையாற்றினார்கள்.