மாத்தளை அரச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நாளாந்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் நாளாந்தம் சுமார் ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது இத்தொகை சுமார் ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இம்மாவட்டத்தில் பல்வேறு நோய்கள் தீவிரமாக பரவி வருவதும் பொருளாதார பிரச்சினையால் இதுவரை காலமாக தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த பலரும் தற்போது மாத்தளை அரச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்வதுமே இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான மூலகாரணமென தெரியவருகிறது.
மேலும் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்ற போதிய வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இல்லாதமையால் நோயாளர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதேசமயம் தற்போது வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றிவரும் வைத்தியர்களும் சிற்றூழியர்களும் கூட பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க தம்புள்ள பிரதேசத்தில் சிக்குன்குன்யா நோய் பரவியுள்ளதையடுத்து மாத்தளை மாவட்ட விவசாய திணைக்களத்தினர் சுகாதார திணைக்களத்தினருடன் கூட்டு சேர்ந்து கிராம சேவகர் மட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் தடுப்பு மருந்து வகைகளை தெளித்து வரும் அதேவேளை விழிப்புணர்வு வேலைத் திட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
சிக்குன்குன்யா உட்பட ஏனைய தொற்று நோய்களின் பாதிப்பு தென்படுமானால் தாமதமின்றி அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் வைத்தியர்கள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.