* பிரதி அமைச்சரிடம் புகார்
உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் , கொழும்பு மத்திய வீதி லொட்ஜில் கடந்த ஒரு வருடமாக தங்கியிருந்து மேசன் தொழில் புரிந்தவருமான 26 வயது பேரனை பிலியந்தலை பஸ் குண்டுவெடிப்புக்குப் பிறகு காணவில்லை என்று பாட்டி ஒருவர் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்.
அத்துடன் பேரன் காணாமல் போனது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் புகாரை பாரம் எடுப்பதற்கு மறுத்துவிட்டதாகவும் அதனால் தனக்கும் , பெற்றோருக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாகேஸ்வரன் ஜெயபிரபா (வயது 26) என்ற யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த இளைஞரே காணாமல் போயுள்ளதாக பாட்டியான செல்வரட்ணம் இரத்தினேஸ்வரி புகார் செய்துள்ளார்.
தனது புகாரில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எனது பேரன் கடந்த ஒரு வருடமாக கொழும்பில் தங்கியிருந்து வெளிநாடு செல்வதற்கு முயற்சித்து வந்தார். உழைப்புக்காக மேசன் தொழிலும் செய்து வந்தார். கடந்த 25.04.2008 வழக்கம் போல் பத்தரமுல்லையிலுள்ள வேலைத்தளத்துக்குச் சென்ற அவர் தலைவலி காரணமாக அவர் தங்கியிருந்த கொழும்பு மத்திய வீதி லொட்ஜுக்குப் போவதாகக் கூறி மாலை 3 மணிக்கு பஸ்ஸில் ஏறிச் சென்றபின் காணாமல் போயுள்ளார்.
அன்றைய தினமே பிலியந்தலை பஸ்குண்டு வெடிப்பும் நடந்ததால் காணாமல் போன பேரனைத் தேடி சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சென்றும் பலனில்லை. காணாமல்போன பேரன் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் முறைப்பாட்டை பாரம் எடுப்பதற்கு மறுத்து விட்டனர். அதனால், மனித உரிமைகள் ஆணைக்குழு , சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளேன்.
காணாமல் போனவர் கடத்தப்பட்டாரா? அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை அறிய முடியாமல் இருப்பது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கொட்டாஞ் சேனை பொலிஸாரிடமும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடனும் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.