வவுனியா - குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரண விசாரணையை மாவட்ட நீதிவான் எம். இளஞ்செழியன் வவுனியா வைத்தியசாலையில் நடத்தினார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மரண விசாரணையின் போது இறந்தவரின் தந்தையும் மனைவியும் வாக்குமூலம் அளித்தனர்.
இறந்தவர் சிதம்பரப்பிள்ளை கலைச்செல்வம் ( 33 வயது) என்று தந்தையார் அடையாளம் காட்டினார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த முத்துத்தம்பி நித்தியானந்தராஜா வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சடலத்தைப் பிரேத பரிசோதனையின் பின்னர் தந்தையிடம் ஒப்படைக்கும்படி நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பூந்தோட்டம் வீதியில் உள்ள மதுபானக் கடைக்கு அருகில் வைத்து இனம்தெரியாதவர்கள் இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.