* சி.எம்.ஈ.வி. வலியுறுத்தல்
கிழக்கில் இன்று சனிக்கிழமை நடைபெறும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கிருக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (சி.எம்.ஈ.வி.) கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்குத் தேர்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வியாழக்கிழமை வாழைச்சேனையில் வைத்து படையினரால் வழிமறிக்கப்பட்டு கொழும்புக்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே சி.எம்.ஈ.வி. இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
`ஏ.பி.' செய்தி நிறுவனத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றபோது வாழைச்சேனை இராணுவ சோதனை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டு, தொடர்ந்து செல்ல அனுமதி மறுத்ததுடன் கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கில் தங்கியிருப்பதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையென அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த ஜெனரல் பாலித பெர்னாண்டோவும் இதனை உறுதிப்படுத்தினார்.
அதேநேரம், தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் கிழக்கு மாகாணத்தினுள் நுழைவதற்கு எதுவித தடையுமில்லையெனக் கூறிய ஜெனரல் பாலித பெர்னாண்டோ, பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் அங்கு வருவோரும் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமெனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டைகளை வைத்திருப்போர் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்குரிய சகல ஒழுங்குகளையும் செய்து கொடுக்குமாறு சகல தரப்பினரையும் கோருவதுடன், இதனைத் தேர்தல் ஆணையாளரும் அவரது அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.