* 5 யுவதிகள், தம்பதியர் கைது
திம்புல்ல பொலிஸ் பிரிவிலுள்ள கொட்டகலை சமாதான புரம் பகுதியில் நடாத்தப்பட்ட சட்ட விரோதமான கருக் கலைப்பு நிலையம் ஒன்றை திம்புல்ல பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சுற்றி வளைத்தனர் இதன் போது 5 யுவதிகள் அவர்களுக்குக் கருக்கலைப்பு செய்த நபரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்கள் மஸ்கெலியா தலாவாக்கல, பொகவந்தலாவ, அக்கர பத்தனை பகுதிகளைச் சேர்நத திருமணமாகாதவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
கருக்கலைப்பு செய்யும் நபர் ஒரு கருக் கலைப்பிற்கு 30 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரை பணம் பெற்றுள்ளதாகவும் திம்புல்ல பொலிஸ் அதிகாரி சுனித் காமினி தெரிவித்தார். மேலும் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இக் கர்ப்பிணிகளைத் தங்க வைத்துக் கருக்கலைப்பு செய்ததாகவும் பணம் கொடுத்த பின்பு தான் கருக் கலைக்கப் பட்டபெண்களை வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பார் எனவும் பணம் கட்ட வழி இல்லாதவர்களிடம், அவர்களது காது, கழுத்தில் உள்ள தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு அனுப்புவதாகவும் சம்பந்தப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா இந்த யுவதிகள் ஜவரும் எவ்விதத்திலும் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்கள் என்றும் 7 மாதம் கர்ப்பிணிகள். இவர்கள் இரண்டு மாதங்களில் குழந்தை பிரசவிக்கும் நிலையில் உள்ளார்கள் எனப் பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கூறினார். பெருந் தோட்டத் துறையைச் சார்ந்த தமிழ் யுவதிகளே இந்நிலையத்தில் கருக்கலைப்பை மேற்கொள்வதாகவும் கருக் கலைப்பு செய்த சந்தேக நபரின் வீட்டுக் கருகில் உள்ள இன்னொரு இல்லத்தில் வைத்தே கருக்கலைப்பு செய்யப்படுவதாகவம் தெரிவந்துள்ளது. அந்த இல்லத்திலிருந்து கருக்கலைப்புக்கு உபயோகிக்கும் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், இரத்தம் தோய்ந்த துணிகளும் மீட்கப்பட்டுள்ளன.
நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி மத்துரட்டவின் பணிப்புரையின் பேரில் திம்புல்ல காவல் துரை அதிகாரி சுமித்காமினி கொட்டகலை வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா, பொது சுகாதார அதிகாரி ஆர். பாலகிருஷ்ணண், ஆகியோருடன் பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.
கைது செய்ப்பட்ட சந்தேக நபரான ராமஜெயம் நடுநாயகமும் அவரது மனைவியும் திம்புல்ல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களை நுவரெயா நீதி மன்றில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் திம்புல்ல பொலிஸ் அதிகாரி சுமித் காமினி தெரிவித்தார்.