பதுளை - பசறை வீதியில் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பிரயாணம் செய்த தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி கே. கணேசமூர்த்தி (வயது 33) என்பவர் தனது வீட்டிற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது, துப்பாக்கியுடன் அப்பஸ்ஸில் ஏறியவர்கள், அவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி. டபிள்யூ. கலனசூரிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
இக்கொலை குறித்து கொலையுண்டவரின் உறவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
அவ் விசாரணையின் போது, கொலையுண்டவர் பாதாளக் கோஷ்டியொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரென்றும், காலப் போக்கில் பாதாளக் கோஷ்டிக்கும், கொலையுண்டவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் பாதாளக் கோஷ்டியொன்றை சேர்ந்த மூவரே, இக்கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இவர்களில் ஒருவர் கொழும்பிலுள்ள மட்டக்குளி என்ற இடத்திலிருந்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.