* இடதுசாரி முன்னணி அறிக்கை
இலங்கைக்கான சர்வதேச நாடுகளின் பொருளாதார உதவிகளை நிறுத்துமாறு கோரும் தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு கோரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையின் வெளிப்பாடாகும் என்று இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான சர்வதேச பொருளாதார உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளார்.
உண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏன் இந்தத் தீர்மானத்துக்கு வந்தன என்பதை ரணில் விக்கிரமசிங்க முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களும் யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்படும் அடக்குமுறைகளுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
இத்தகைய உண்மை நிலைகளை ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், ஊடக அமைப்புகள் மேற்கொண்டு வந்த பிரசாரங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் என்பவற்றின் காரணத்தினாலேயே அந்நாடுகள் இந்தத் தடையை விதிப்பதற்கு முன்வந்துள்ளன.
தற்போது ரணில் விக்கிரமசிங்க இந்தத் தடைகளை மேற்கொள்ள வேண்டாமென்று தான் ஐரோப்பிய நாடுகளிடம் கோரப்போவதாகக் கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் இத்தகைய செயற்பாடுகள் எதைக் காட்டுகிறது. இவர் சர்வதேச முதலாளித்துவத்தின் முகவர் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய சூழ்நிலையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சிறு அளவில் கூட எத்தகைய விட்டுக்கொடுப்பும் இன்றி தொடர்ந்தும் மிகக் கொடிய முறையில் மனித உரிமைகளை மீறிவரும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்க காப்பாற்ற முயல்வது வேடிக்கையானதாகும்.
இன்று தமிழ் பெண்கள் விசாரணையென்ற போர்வையில் பாதுகாப்புப் பிரிவினரால் கூட்டிச் செல்லப்பட்டு பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமைகள் எல்லை மீறியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரத் தடைக்கு மேலும் பல காரணங்களும் உள்ளன. குறிப்பாக இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல், பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமை என்பன போன்ற காரணங்களும் உள்ளன.
எனவே, இத்தகைய நிலைமைகளில் எத்தகைய மாற்றங்களும் காணப்படாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஏன் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை காப்பாற்ற முன்னிலையில் செயற்படுகின்றார்.
நாட்டு மக்கள் விலைவாசி உயர்வாலும் பணவீக்கத்தாலும் தாங்கொணா துயரத்தில் வாழ்கின்றனர். மறுபக்கத்தில் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வு துயரத்தின் எல்லையை கடந்த நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து மக்களை காப்பாற்ற வேண்டியது அவரது பொறுப்பாகும். ஆனால், ரணிலின் செயற்பாடு "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது" போல் உள்ளது.