புத்தளம், வெஸ்ட்ரன் வீதியில் வசிக்கும் நவரத்னம் பாலச்சந்திரன் என்ற 38 வயதுடைய இளைஞர் கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை 10 மணிக்கு புத்தளம், ஸ்பிரில் வீதியில் வைத்து எக்ஸ்.எச். 0640 என்ற இலக்கம் பொருத்திய வெள்ளை வானில் வந்த ஆயுதம் தரித்த நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
அதேவேளை, கொழும்பு மட்டக்குளி, காக்கைத்தீவில் வசிக்கும் மரியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம் என்ற 23 வயதுடைய தமிழ் இளைஞரும் காலை 9.30 மணிக்கு அவர் தொழில்புரியும் இடமான கதிரானவத்தையில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். இவரை இலக்கத்தகடு அற்ற வெள்ளை வானில் வந்த ஆயுதம் தரித்த நபர்களே கடத்திச் சென்றுள்ளார்கள்.
இவர்கள் தாங்கள் மோதரைப் பொலிஸ் நிலையத்திலிருந்து வருவதாகவும், இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்கள். ஜோசப் நவரத்தினம் கடல்கோள் பேரலையால் தனது மனைவியையும், பிள்ளையையும் இழந்தவராவார்.
இச்சம்வங்கள் தொடர்பாக பாலச்சந்திரனின் மாமியும், ஜோசப் நவரத்தினத்தின் உறவினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்கள். அத்துடன், இச்சம்பவங்கள் தொடர்பாக புத்தளம், மோதர பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடத்திச் சென்ற நபர்கள் குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தினால் அல்லவென நிரூபணமாகியுள்ளது. இம்முறைப்பாடு மேல் நடவடிக்கைகளுக்காக மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.