கொழும்பு மட்டக்குளியில் கடந்த 28 ஆம் திகதி கடத்தப்பட்ட செல்வச்சந்திரன் நிஷாந்தன் என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி புளுமென்டல் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி கொழும்பு 15, மட்டக்குளி வில்பட் வீதியிலிருந்து விசாரணையின் பேரில் வெள்ளை வானில் வந்த சீருடை தரித்த நபர்களினால் இவர் கடத்திச் செல்லப்பட்டார்.
மூன்று நாட்கள் கண்கள்கட்டப்பட்ட நிலையில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர் தாங்கள் தேடிய நபர் இவரில்லை எனக்கூறி கடத்தல்காரர்களின் வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு கொழும்பு 13, புளுமென்டல் வீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பில் மக்கள் கண்காணிப்புக் குழு எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் அச்சு மற்றும் மின் ஊடகங்கள் மூலமாக கடத்தல்காரர்கள் மீது ஏற்படுத்திய அழுத்தங்களின் காரணமாகவே இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
கடத்தல் சம்பவங்களுக்கும் கப்பம் கோருதல் சம்பவங்களுக்கும் உள்ளாகின்றவர்கள் அவை பற்றிய தகவல்களை தாமதமின்றி உடனடியாக மக்கள் கண்காணிப்புக் குழுவிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் தீர்வுக்கு கொண்டுவரப்படலாம்.
தமது விடுதலை தொடர்பில் எடுத்துக்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் தொடர்பில் செல்வச்சந்திரன் நிஸான், அவரது குடும்பத்தினர் மக்கள் கண்காணிப்புக் குழுவிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.