அரசின் அதிகாரப் பலத்திற்காகவே கிழக்கில் அவசரமாக தேர்தல் நடத்தப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சாடியுள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் அரசியல் குழுவானது நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
கிழக்கில் வாழும் மக்களோ, நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களோ எதிர்பார்த்திராத வேளையில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்திருக்கிறது. யார் எதைக் கூறினாலும், எவ்வாறான தர்க்கங்களை முன்வைத்தாலும், தேசிய பிரச்சினை விடயத்தில் எந்தவொரு பிரிவினருக்கோ, எந்தவொரு பிரச்சினைக்கோ மாகாண சபைகள் மூலம் தீர்வு கிடைக்காதென்பதை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாம் கூறி வருகிறோம். நடத்தக்கூடாத நேரத்தில் அவசர அவசரமாக இந்தத் தேர்தலை நடத்துவதற்கான காரணம், அரசாங்கத்தின் அதிகாரபலத்துக்கான தேவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆயுதங்களோடு ஒரு குழுவினர் கிழக்கு மாகாணத்தில் நடமாடுவது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருக்கிறது. பிள்ளையான் குழுவினரை நிராயுதபாணியாக்குமாறும், அது முடியாவிட்டால், தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலை ஒத்திவைக்குமாறும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து கூறி வந்தது. எப்படியிருப்பினும், அரச சொத்துகளையும் அரச அதிகாரிகளையும் தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வது மாத்திரமன்றி, பிள்ளையானின் ஆயுதத் தரித்தலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தத் தேர்தலை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலை எப்படியாவது தனது மடியில் போட்டுக் கொள்வதற்காக எதையாவது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது. விசேடமாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முஸ்லிம் காங்கிரஸால் அடிக்கடி தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரிவினைவாதத்தை தோளில் சுமந்து கொண்டே இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையை வளர்க்கவும், பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கவுமே பிரிவினைவாதத்தால் முடியும். எல்லாவிதமான பிரிவினைவாதங்களையும் தோற்கடித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்துவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இன்றைய தேவை அதுதான். எனவே, சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்துமாறு கிழக்கு வாழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இந்த இரு அணிகளும் பிரிவினைவாதத்தையும் பதவி ஆசையையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான், கிழக்கு மாகாண சபைக்கான தனது பிரதி நிதிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை கிழக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது பாரதூரமான மோசடிகள் இடம்பெறுவதற்கான வழியை இது திறந்துவிட்டுள்ளது.
எனவே, நேர்மையாக வாக்களிப்பதோடு, எவ்வித மோசடிகளும் இடம்பெறா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கிழக்கு வாக்காளரிடம் இருப்பதை மறந்துவிடக்கூடாது. அந்தப் பொறுப்புக்குத் தோள் கொடுத்து, தேர்தல் மோசடியில் ஈடுபட எவருக்குமே இடமளிக்க வேண்டாமென நாம் கிழக்கு வாழ் வாக்காளப் பெருமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
அடுத்ததாக, இந்தத் தேர்தல் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரம் தீர்மானகரமான தேர்தலாக இருக்கப்போவதில்லை. ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் இந்தத் தேர்தல் தீர்மானகரமானதாகும். விசேடமாக, அரசாங்கத்தின் சுய விருப்பத்தோடு இந்தத் தேர்தல் நடைபெறுவதில்லை. இந்தியா மற்றும் ஏனைய மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே தான் இதனை ஒரு தனி நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.
அது மாத்திரமல்ல. பாராளுமன்றத்தைத் தன்னிச்சையாக ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைத்த நிலையிலேயே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோன்று 17 ஆவது அரசியல் சாசன திருத்தத்துக்கு ஏற்ப ஸ்தாபிக்க வேண்டிய சுயாதீன தேர்தல் ஆணையம், சுயாதீன பொலிஸ் ஆணையம், சுயாதீன அரசு சேவை ஆணையம் ஆகியவை ஸ்தாபிக்கப்படாத நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிர்மாறாக "மகிந்த சிந்தனை" கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கம் பயணிப்பது தற்போது தெரிகிறது.