* ஐ.தே.க. வலியுறுத்தல்
ரொஷான் நாகலிங்கம்
அரசாங்கமும் முப்படையினரும் நீதி நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முன்வர வேண்டுமென ஐ.தே.க. வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியதுடன், மோசடி இடம்பெற்றால் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய நெருக்கடி தோன்றுமெனவும் எச்சரித்தார்.
எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
`ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவர் பாதாள கோஷ்டியினரையும் படைகளிலிருந்து விலகிய சிலரையும் கிழக்குக்கு அழைத்துச் சென்று ஏனைய கட்சி வேட்பாளர்களையும் அவர்கள் சார்பில் பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் அச்சுறுத்தி வருகின்றார். திருகோணமலையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்த ஜோன்செனவிரட்ன தங்கியிருந்த ஹோட்டலுக்கு இக்குழுவினர் சென்று அவரை அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். அதுபோல் எமது கட்சியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரது வீட்டின் முன்பாக கிரனைட்டை வைத்துவிட்டு சென்ற நிலையில், அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, இன்று நடைபெறவுள்ள தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதாகவும் நடப்பதற்கு அவரையும் அக்குழுவினரையும் கைதுசெய்யுமாறு நாம் கோருகின்றோம்.
இது இவ்வாறிருக்க, ஆயுதக் குழுவொன்று மட்டக்களப்பில் அராஜக செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், அதனை கிழக்கின் ஏனைய மாவட்டங்களான திருமலைக்கும் அம்பாறைக்கும் அவர்களின் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்குழுவினர் திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முகாம் அமைத்து வருகின்றனர். இவ்வாறு முகாமமைத்து வருவதற்கான காரணம், மக்களை அச்சுறுத்தி வாக்குகளை கொள்ளையடிப்பதற்கேயாகும்.
மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காகவே தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோருகின்றது. அவ்வாறு செய்யாதுவிடின் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும்.
எனவே, இந்த எதிர்கால நடவடிக்கையை தடுப்பதற்கு அரசாங்கமும் படையினரும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்த முன்வர வேண்டும்" என்றார்.