* நம்பிக்கையில் இலங்கை
பாசுமதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதில்லையென்ற தீர்மானத்தை இந்தியா தளர்த்துமெனவும் உணவுநெருக்கடியிலிருந்து இலங்கையை அந்த நாடு காப்பாற்றுமெனவும் இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரிசிக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுமானால் இந்தியா நிச்சயமாக உதவியளிக்கும்.
தனது களஞ்சியங்களில் 2.5 மில்லியன் தொன் அரிசியை இந்தியா தற்போது வைத்துள்ளது. இதனால் இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவுவதென்பது அவர்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றாது என்று வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.டி. இரட்நாயக்க வியாழனன்று தெரிவித்துள்ளார்.
மியான்மாரிலிருந்து 1 இலட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை உடன்படிக்கை செய்திருந்தது. ஆனால் அந்நாட்டில் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டதால் தற்போது பெரும் நெருக்கடி நிலை அங்கு தோன்றியுள்ளது.
மியான்மாரில் 17 ஆயிரம் தொன் அரிசி 3 கப்பல்களில் ஏற்றப்பட்டதாகவும் ஆனால் குறித்த துறைமுகம் சூறாவளி அனர்த்தத்தினைத் தொடர்ந்து மூடப்பட்டதால் கப்பல்கள் இலங்கைக்கு வரமுடியவில்லையெனவும் இரட்நாயக்க கூறியுள்ளார். சூறாவளியால் 23 சிறிய கப்பல்கள் துறைமுகப் பகுதியில் மூழ்கிவிட்டன. அதனால் துறைமுகத்திலிருந்து கடலுக்கான பயணப்பாதைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மியான்மார் அதிகாரிகளுடன் நாம் தொடர்புகொண்டு வருகிறோம் என்றும் இரட்நாயக்க கூறியுள்ளார்.
பாசுமதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதில்லையென இந்தியா தீர்மானித்தபோதும் இலங்கை அதிகாரிகளின் இந்த விடயம் தொடர்பாக பிரயோசனமான வகையில் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களில் தெரிவிக்கப்படுமாற்போன்று தற்போது இலங்கையில் அரிசி நெருக்கடி இல்லை. உண்மையிலேயே தேவையேற்பட்டால் இந்தியா உதவும். அடுத்த இரு மாதங்களுக்குள் தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்வதாக இந்தியா எமக்குக் கூறியுள்ளது என்றும் இரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திடமிருந்து இலங்கை அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான செய்திகள் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை.
தாய்லாந்திடமிருந்து எவரும் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அதிக விலைக்கே விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் எவர் கொள்வனவு செய்வார்கள்? பல்வேறு தேர்வுகள் குறித்து எமது மக்கள் பேசுவார்கள். ஆனால் தாய்லாந்திலிருந்து அரிசி இறக்குமதி குறித்து எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளவில்லையென இரட்நாயக்க தெரிவித்தார்.